மருத்துவக் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி - கடந்த 3 ஆண்டுகளில் ரூ.24,500 கோடி வசூலித்த மத்திய அரசு!
மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியாக(ஜிஎஸ்டி) கடந்த 3 ஆண்டுகளில் ரூ.24,500 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அவசர மருத்துவ செலவை சமாளிக்க மருத்துவ காப்பீட்டை பெரும்பாலான நடுத்தர குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் கட்டும் பிரீமியம் தொகைகளுக்கு மத்திய அரசு 18 சதவிகிதம் வரி வசூலிக்கின்றது.
இதேபோல், ஆயுள் காப்பீட்டுகளுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கு வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி தொகை குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
கடந்த 2021 முதல் 24 வரையிலான காலகட்டத்தில் மருத்துவ காப்பீட்டுகளுக்கு ஜிஎஸ்டியாக ரூ.21,255.55 கோடியும், மருத்துவ மறுகாப்பீடுகளுக்கு ஜிஎஸ்டியாக ரூ. 3,273.59 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2023 - 24 வரையிலான காலகட்டத்தில் மட்டும் மருத்துவ காப்பீட்டுகளுக்கு வரியாக ரூ.9,747.3 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டியை ரத்து செய்யக் கோரி மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சமீபத்தில் கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.
இந்த பிரச்னையை கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் மக்களவையில் கடந்த வாரம் கேள்விகள் எழுப்பியிருந்தனர். மேலும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டாலும், தனது அமைச்சரவை சகா நிதின் கட்கரியின் பேச்சையாவது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்க வேண்டும் என்றனர். இதனையடுத்து காப்பீட்டுகள் மீதான வரியை ரத்து செய்வது அல்லது குறைப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், காப்பீட்டுகள் மீதான வரிகளை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று காலை போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.