வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவும், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் இணைந்து நாசா - இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (நிசார்) என்ற அதிநவீன செயற்கைக்கோளை ரூ.11,284 கோடி செலவில் உருவாக்கியுள்ளது. இந்த செயற்கைக்கோளின் 27½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 2.10 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில், இன்று மாலை 5.40 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி. எப்-16 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது .
நிசார் செயற்கைக்கோள் 2,392 கிலோ எடை கொண்டது. இது ஒரு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். இந்த செயற்கைக்கோள் வானிலை, பகல் மற்றும் இரவு தரவுகளை வழங்கும்.இந்த நிசார் செயற்கைக்கோளில் உள்ள அதிநவீன கேமரா பூமியின் மேலடுக்கில் நிகழும் நிகழ்வுகளை துல்லியமாக படமெடுத்து, 12 நாட்களுக்கு ஒருமுறை பூமிக்கு அனுப்பிவைக்கும். இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.