குரூப் 1 தேர்வு முறைகேடு விவகாரம் | உரிய ஆவணங்களை தர மறுத்த 4 பல்கலை.கள் மீது வழக்குப்பதிவு!
குரூப் 1 தேர்வு முறைகேடுகள் குறித்து உரிய ஆவணங்களை தர மறுத்த 4 பல்கலைக்கழகங்களை தாமாக முன்வந்து வழக்கில் சேர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த சக்திராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019-ல் நடத்திய குரூப் 1 தேர்வில், தொலைநிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு, தமிழ் வழிக்கல்வி
பயின்றவர்களுக்கான 20% இடஒதுக்கீட்டு சலுகை வழங்கப்பட்டது. தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான 20% இடஒதுக்கீடு, தொலை நிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு வழங்குவது சட்டவிரோதம்.
இந்த வழக்கில், தமிழ்நாடு அரசு மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. அந்த உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. இதனால், அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமர்வு விசாரித்தது.
அப்போது, “அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் இருந்து விவரங்கள் வழங்கப்படாததால் இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. அடிப்படை விவரங்களைக் கூட பல்கலைக்கழகங்கள் கடந்த 2 ஆண்டுகளாக வழங்காமல் இழுத்து அடித்து வருகின்றன. ஆகவே இந்த 4 பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களை இந்த வழக்கில் தானாக முன்வந்து சேர்த்து நீதிமன்றம் உத்தரவிடுகிறது” எனக் கூறினர்.
மேலும் இது தொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இந்த உத்தரவின் பேரில் தேவையான ஆவணங்களை பெற ஒரு நபரை நியமிக்கவும் உத்தரவிட்டனர். விசாரணைக்குத் தேவையான விவரங்களை சேகரிக்க, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கால அவகாசத்தை நீட்டித்து வழங்க விரும்பவில்லை எனவும், குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் செயல்படுபவர்கள் மீதும் வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆகவே, விசாரணையின் நோக்கத்தை விரிவுபடுத்தவும், ஆவணங்களை மறைத்து குற்றவாளிகளை பாதுகாப்பவர்களை வழக்கில் சேர்க்கவும் விசாரணை முகமைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. பல்கலைக்கழகங்கள் தரப்பிலிருந்து ஆவணங்களைத் தர தாமதம் செய்தால் லஞ்ச ஒழிப்புத்துறை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று, சோதனை நடத்தி ஆவணங்களை சேகரிக்கலாம் என கூறிய நீதிமன்றம், வழக்கின் முன்னேற்றம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.