சிலந்தி ஆற்றில் தடுப்பணை - பணிகளை நிறுத்த கேரள அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!
சிலந்தி ஆற்றில் உரிய அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படும் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என கேரளா அரசிற்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் அருகே பெருகுடா என்ற இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே அந்த மாநில அரசு தடுப்பணை கட்டி வருகிறது. அமராவதி அணையின் நீர் ஆதரமாக சிலந்தி ஆறு உள்ள நிலையில், தற்போது கேரள அரசு அணை கட்டி வருவது தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் அமராவதி அணை மூலமாக திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 55,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அமராவதி ஆற்றுப் படுகையில் 110 கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து முழுவதும் குறைந்துவிடும் எனவும், குடிநீர் மற்றும் விவசாய பாசனத் தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் போகலாம் எனவும் அச்சம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் விவகாரத்தை தாமாக முன்வந்து தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரணைக்கு எடுத்தது. இதில், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவில்லை. நீரை தடுத்து உள்ளூர் மக்களுக்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான கலிங்கு தான் அமைப்பட்டு வருகிறது என கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு, எந்த கட்டுமானம் மேற்கொள்வதாக இருந்தாலும் உரிய அனுமதி பெற்றபின் தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்தது. மேலும், உரிய அனுமதி பெறாமல் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றால், அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து விசாரணையை ஜூலை 23ஆம் தேதி தள்ளிவைத்தது.