சூர்யாவுக்கு பச்சைக்கொடி... விஜய்க்கு சிவப்புக்கொடி காட்டும் போஸ் வெங்கட்! காரணம் என்ன?
சூர்யாவை அரசியலுக்கு வர சொன்ன நடிகரும், இயக்குநருமான போஸ் வெங்கட் நடிகர் விஜய்யை தாக்கி பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் முதல் அரசியல் மாநாடு நேற்று விக்கிரவாண்டி வி.சாலையில் நடைப்பெற்றது. மாநாட்டில் விஜய் பேசியது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அரசியல்வாதியாக அனல்பறக்க நேற்று விஜய் உரையாற்றி இருந்தார். இவரது இந்த பேச்சு குறித்து பல அரசியல் தலைவர்களும், நடிகர்களும் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் இயக்குநரும், நடிகருமான போஸ் வெங்கட்டும் தனது எக்ஸ் பக்கத்தில் விஜய்யின் பேச்சுக்குறித்து ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
“யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு... மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம்..” என விஜய்யை தாக்கி பதிவிட்டுள்ளார். இவரின் இந்தப்பதிவு தற்போது பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது.
கங்குவா இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யாவை அரசியலுக்கு அழைத்த போஸ் வெங்கட், விஜய்க்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என கேள்விகள் எழுந்துள்ளது.
கங்குவா இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் போஸ் வெங்கட் பேசியது என்ன?
நான் இந்த இடத்தில் அரசியல் பேசலாம் என்று நினைக்கிறேன். ஒரு சூப்பர் ஸ்டார், ஒரு நடிகர் ரசிகர்களை வழிநடத்த வேண்டும். எப்படி வழி நடத்த வேண்டும் என்றால், சூர்யா போன்று வழி நடத்த வேண்டும். தர்மம் செய்ய இப்போதே சொல்லிக் கொடுத்து விட வேண்டும். மக்களுடைய பிரச்சினையை எப்படி கவனிக்க வேண்டும் என்பதை தற்போதே சொல்லிக் கொடுத்து விட வேண்டும். நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து விட வேண்டும். எல்லாவற்றையும் மீறி உங்களுக்கு அறிவு கொடுத்து விட வேண்டும், படிப்பு கொடுத்து விட வேண்டும். அதன் பின்னர் அரசியலுக்கு வர வேண்டும்.
ஒரு தலைவன் எங்கிருந்து வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம்; அவன் நடிகனாக இருக்கலாம்; ஐஏஎஸாக இருக்கலாம் எழுத்தாளராக இருக்கலாம்; பேச்சாளராக இருக்கலாம். ஆனால் தலைவனுடைய அடிப்படை, அவனுடைய ரசிகர்களை முட்டாளாக வைத்திருக்கக் கூடாது. அவனை அறிவாளியாக வைக்க வேண்டும். அவனைப் படிக்க வைக்க வேண்டும். அதன் பின்னர் அரசியலுக்கு வர வேண்டும்; ஆகையால் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும்.” என்று பேசினார். சூர்யாவை அரசியலுக்கு வரச்சொன்ன போஸ் வெங்கட் விஜயை விமர்சித்து இருப்பது பேசு பொருளாகியுள்ளது.