பெரும் பதற்றம் | தடுப்புகளை உடைத்தெறியும் விவசாயிகள்!!
தடையை மீறி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறி வருவதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
ஓராண்டு காலம் தொடர்ந்து போராடி, நரேந்திர மோதி அரசு விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வைப்பதில் வெற்றி பெற்ற விவசாயிகள், தங்களது கோரிக்கைகளுக்காக மீண்டும் களத்தில் இறங்கத் தயாராகிவிட்டனர். ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக வந்து கொண்டிருக்கின்றனர்.
அரசுடனான பேச்சுவார்த்தைகளில் இன்னும் முடிவு எட்டப்படாததால் விவசாயிகளின் இரண்டு பெரிய அமைப்புகளான சம்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய இரண்டும், தங்களது கோரிக்கைகளுக்காக செவ்வாய்க்கிழமை 'டெல்லி நோக்கி அணிவகுப்போம்' என்ற முழக்கத்தில் உறுதியாக உள்ளன.
இதனையடுத்து டெல்லி நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது போலீசார் சரமாரி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த நிலையில் டெல்லி- அம்பாலா நெடுஞ்சாலையில் அதாவது பஞ்சாப்-ஹரியானா எல்லையில் சம்பு என்ற இடத்தில் டெல்லி நோக்கி பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களில் சென்று கொண்டிருந்த விவசாயிகளை போலீசாரும் துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீசார் தடையை உடைத்து விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறினர்.
இதனையடுத்து டெல்லி நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது போலீசார் சரமாரி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஆனாலும் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து டெல்லி நோக்கி முன்னேறி வருகின்றனர். இதனால் போலீசாரும் துணை ராணுவத்தினரும் செய்வதறியாமல் திகைத்து போயுள்ளனர். டெல்லி- அம்பாலா நெடுஞ்சாலை பெரும் போர்க்களமாக காட்சி தருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் போலீசார் விவசாயிகளை தடுத்து வருவதால் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.