தூக்கில் தொங்கிய பேரன்.. முட்புதரில் கிடந்த பாட்டி - சென்னையில் அதிர்ச்சி!
சென்னை புழல் சிவராஜ் 3வது தெருவை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவரான கிஷோர் (24). புழல் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான கிஷோர், தனது தாய் சரஸ்வதி, பாட்டி கமலம்மாளுடன் (82) ஒரே வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோயில் திருவிழாவிற்கு சென்ற பாட்டி சரஸ்வதி மாயமானதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கிஷோர் நேற்று தனது வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாக தெரிகிறது.
ஜன்னல் வழியே அவரை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புழல் போலீசார் கிஷோர் உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சிறிது நேரத்தில் கிஷோர் வீட்டின் அருகில் உள்ள முட்புதரில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக கிஷோர் வீட்டிற்கு விரைந்த போலீசார் முட்புதரில் சோதனை செய்தனர். அப்போது அங்கு அழுகிய நிலையில் மூதாட்டி உடல் கிடந்தது கண்டெடுக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் கண்டெடுக்கப்பட்ட மூதாட்டி உடல் காணாமல் போன கமலம்மாள் (82) என தெரியவந்தது. மூதாட்டியின் உடல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிஷோர் உயிரை மாய்த்துக்கொண்டதற்காகன காரணம் என்ன? காணாமல் போன மூதாட்டி கிஷோரின் வீட்டருகே உயிரிழந்து கிடந்தது எப்பது? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் பாட்டியும், பேரனும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.