குன்னூரில் ரூ.85 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் - தன்னார்வலர்கள் குழுவிற்கு குவியும் பாராட்டு!
குன்னூர் அருகே கொலக்கம்பை பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தன்னார்வலர்கள் குழு ரூ.85 லட்சம் செலவில் புதுப்பித்து தந்துள்ளனர். இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள 18000க்கும் மேற்பட்டோர் பலனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கொலக்கம்பை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நீண்ட காலமாக பராமரிப்பின்றி இருந்தது. இந்த பகுதியை சுற்றி 57 கிராமங்கள் உள்ளன. அவற்றில் 14 பழங்குடியினர் குக்கிராமங்கள் உட்பட மொத்தம் 18701 மக்கள் வசித்து வருகின்றனர். சராசரியாக தினமும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, 120 வெளிநோயாளிகள் வந்து செல்லும் நிலையில், மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
ஆனால் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையாலும், மேல்சிகிச்சைக்காகவும் அப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் சிகிச்சைக்காகவும் மற்றும் அவசர மருத்துவ உதவிக்காகவும் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு அல்லது குன்னூர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் அவ்வப்போது உரிய நேரத்தில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தன.
இதனைத் தொடர்ந்து தன்னார்வலர்கள் ராதிகா சாஸ்திரி, சார்லஸ் நாதன், ஜான், விபின், மற்றும் பொறியாளர் ஜான்சன் ஆகியோர் குழுவாக சேர்ந்து மக்களின் நலனை கருத்தில் கொண்டு பராமரிப்பின்றி இருந்த சுகாதார நிலையத்தை ரூ.85 லட்சம் மதிப்பில் புதுப்பித்துள்ளனர். இதில் சுகாதார நிலையத்துக்கு தேவையான நவீன கருவிகள் மற்றும், மருத்துவமனைக்கு தேவையான உபகரண பொருட்கள் மட்டுமின்றி அவசர சிகிச்சைக்கான வார்டுகளும் மற்றும் பிரசவ வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் திறப்பு விழாவில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் பாலுசாமி வரவேற்று பேசினார். மாவட்ட ஆட்சியர் அருணா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் குன்னூர் கோட்டாட்சியர் பூசன குமார், வட்டாட்சியர் கனிசுந்தரம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், உள்ளாட்சி அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று மருத்துவமனையை திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில்:
“இப்பகுதியில் பழங்குடியினர் வசிக்கும் கிராமங்கள் உட்பட 57 கிராமங்கள் உள்ளன. இந்த மருத்துவமனையால் இந்த பகுதியை சுற்றியுள்ள அனைத்து மக்களும் பயனடைவார்கள். இதனை கட்டிக் கொடுத்த தன்னார்வலர்களுக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவிக்கிறேன். தமிழ்நாடு அரசு மருத்துவத்துறைக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஊட்டியில் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் ஆண்டுக்கு 150 பேர் வீதம் மூன்று ஆண்டுகளில் 450 மருத்துவர்கள் பயிற்சி பெற்று செல்கின்றனர்.
மேலும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.