பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அழைப்பு!
அரசு பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 2வது நாளை எட்டியுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் CITU, அண்ணா உள்ளிட்ட சங்கங்கள் பங்கேற்றுள்ளன.
இதனால் சில மாவட்டங்களில் பேருந்து சேவை முடங்கியுள்ளது. முதல் நாளான நேற்று தற்காலிக ஓட்டுநர்கள் இயக்கிய சில பேருந்துகள் விபத்துக்குள்ளான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பெரும்பாலான பேருந்துகள் வழக்கம் போல இரண்டு நாட்களாக இயக்கப்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் தற்காலிகமாகப் பேருந்துகளை இயக்க ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன் படி உரிய பயிற்சி பெற்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமம் பெற்றவர்கள் அசல் ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டையுடன் மாவட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகளை அணுக அரசு அறிவுறுத்தியுள்ளது.