சேலம் பெரியார் பல்கலை.யில் ஆளுநர் ஆய்வு: வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம்!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு, ஆளுநர் ரவி வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர், அரசியல் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு மேற்கொண்டதாக புகார் எழுந்த நிலையில், காவல்துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க சென்னையிலிருந்து சேலம் சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அப்போது, பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் ஜெகநாதன் மற்றும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடி, ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு சாலை வழியாக சேலத்திலிருந்து கோவைக்கு ஆளுநர் செல்லவுள்ளதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
முன்னதாக ஆளுநர் ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.