புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கொடியேற்றி மரியாதை!
குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நாட்டின் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்று வரும் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். காவல் துறையினரின் பல்வேறு படைப்பிரிவினர் மற்றும் என்.சி.சி மாணவர்கள் உள்ளிட்ட பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தலைமை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயரதிகாரிகள், அரசு திறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். தெலுங்கானாவில் தேசியக்கொடியேற்றி வைத்துவிட்டு, தனிவிமானம் மூலம் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் புதுச்சேரிக்கு வந்து புதுச்சேரி விழாவில் பங்கேற்றார்.
பின் குடியரசு தின விழாவில் உரையாற்றிய தமிழிசை, விவசாயிகள் பாசன வசதிக்காக ரூ.4.45 கோடிக்கு இலவச மின்சார மானியம் வழங்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையில் தீயணைப்பு வீரர்கள் தேர்வில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது எனவும், மக்களின் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன எனவும் கூறினார்.