உரையில் இருந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் சொந்த கருத்துகளையே ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார் - அமைச்சர் ரகுபதி விமர்சனம்!
ஆளுநர் ஆர்.என்.ரவி உரையில் இருந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் சொந்த கருத்துகளை பேசி அமர்ந்ததாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்கமால் 2 நிமிடங்களில் புறக்கணித்தார். உரையில் உள்ள பல அம்சங்களில் முரண்படுவதாக தெரிவித்த அவர், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் பாரத் என கூறி 2 நிமிடங்களில் தனது உரையை முடித்துக் கொண்டார். ஆளுநர் படிக்காத உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காத உரையை சட்டப்பேரவைக் குறிப்பில் முழுவதுமாக பதிவிடவும், ஆளுநருக்கு எதிராகவும் அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அப்போது சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார்.
“ஆளுநர் ஆர்.என்.ரவி உரையில் இருந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் சொந்த கருத்துகளை பேசி அமர்ந்தார். இதையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக் கொண்டு தான் உள்ளனர். வடமாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது. தமிழ்நாடு அனைத்திலும் முதலிடத்தில் உள்ளது என புள்ளி விவரங்களுடன் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஆளுநர் உரையில் ஏதேனும் சந்தேகம் இருந்து இருந்தால் கேட்டு தெளிவு பெற்று இருக்கலாம். இவை அனைத்தும் தென் மாநில ஆளுநர்களின் திருவிளையாடல்கள். சுமூகமான சூழலை உருவாக்க வேண்டும் என்று தான் நாங்கள் நினைக்கிறோம். விளம்பரம் இல்லாமல் அரசின் சாதனைகள் தான் உரையில் உள்ளன.
நாங்கள் மரியாதையோடு அழைத்தோம். ஆனால் அந்த மரியாதையை அவர்கள் காப்பாற்றிக் கொள்ளவில்லை. இன்றைய சட்டப்பேரவை நிகழ்வு குறித்தும், ஆளுநர் நடவடிக்கை குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி கருத்து சொல்லி இருக்க மாட்டார். திமுக பயந்து கொண்டு பேட்டி அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. சாதகமான சூழல் இல்லாத போதும், முதலமைச்சர் ஆளுநரோடு அனுசரித்து போக தான் நினைத்தார்.
மத நல்லிணக்கம், அமைதியான சூழல் இல்லை என்று அவர் நினைத்தால் நாங்கள் பொறுப்பல்ல. தமிழ்நாட்டில் மத நல்லிணக்கம் அமைதி இருப்பதால் தான் வெளிநாட்டினர் இங்கு பல ஒப்பந்தங்களை மேற்கொண்டனர்” இவ்வாறு தெரிவித்தார்.