“ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போல் செயல்படுகிறார்” - #TNMinister ரகுபதி பேச்சு!
“ஆளுநர் ரவி, தான் ஆளுநர் என்பதை மறந்துவிட்டு, ஒரு அரசியல்வாதி போல் செயல்பட்டு வருகிறார்” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தில், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
“ஆளுநர் ரவி, தான் ஆளுநர் என்பதை மறந்துவிட்டு, ஒரு அரசியல்வாதி போல் செயல்பட்டு வருகிறார். ராஜ்பவன் இன்றைக்கு அரசியல் பவனாக மாற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கமலாலயத்துக்கு போட்டியாக, ராஜ்பவன் டெல்லியின் சார்பாக அரசியல் செய்து வருகிறது. ஒரு ஆளுநர் இந்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இருக்கும் உறவினை உருவாக்கும்
நபராக இருக்க வேண்டும். ஆனால், நம் ஆளுநர் அந்த உறவை எந்தெந்த வகையில் துண்டிக்க
முடியுமோ, அந்தந்த வகையில் அவருடைய நடவடிக்கைகள் அமைந்து இருக்கிறது.
ஆன்லைன் ரம்மியின் பிராண்ட் அம்பாசிடர் போல மற்றும் நீட் தேர்வின் பிஆர்வோ போல் செயல்பட்டு வருகிறார். காந்தி மண்டபம் வளாகத்தில் மது பாட்டில்கள் கண்டறியப்பட்டுள்ளது மிக வருத்தம் அளிக்கிறது என கூறியுள்ளார். காந்தி மண்டபத்தில் ஆளுநர் மற்றும் அவருடன் சென்ற கேமராமேன் கண்களுக்கு மட்டும் மது பாட்டில்கள் தெரிந்துள்ளது. சென்னை மாநகராட்சி, காந்தி மண்டபம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரங்களில் சிறப்பான சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதிகமாக குப்பை இருக்கும் இடமான மெரினா கடற்கரையை கூட சுத்தமாக வைத்துக் கொள்ளும் அரசாங்கம் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது.
வீட்டை நாம் பாதுகாப்பாக தான் வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வீட்டில் ஒரு திருடன் புகுந்துவிட்டால் நம் வீட்டில் பாதுகாப்பு இல்லை எனக் கூறிவிட முடியாது. திருடன் வரும்பொழுது ஏன் பாதுகாப்பு குறைவாக இருந்தது? என்று கண்டறிவதை விட்டுவிட்டு, பாதுகாப்பு குறைவாக உள்ளது என்று மட்டும் கூறிக் கொண்டிருப்பதில் எந்த விதமான அர்த்தமும் கிடையாது. அவருக்கும் தெரியும் காந்தியடிகள் சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனாலும் இந்திய முழுவதும் பல சூதாட்டங்கள் நடந்து கொண்டு வருகிறது.
திமுக அரசு மதுவிலக்கிற்கு எப்போதும் ஆதரவாக உள்ள அரசு. ஆனால், மது ஒழிப்பை தமிழ்நாடு அரசு மட்டும் கையில் எடுக்க முடியாது. அனைத்து மாநிலங்களையும் ஒன்றிணைத்து, மத்திய அரசு தான் அந்த திட்டத்தை கையில் எடுக்க வேண்டும். மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அதிகப்படியான முன்னுரிமை மற்றும் முக்கியத்துவம் அளிக்கும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கின்றார்.
எங்களுக்கு தமிழ்நாட்டில் மது இருக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஆனால் அருகாமையில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மது இருக்கிறது. இந்தியா முழுவதும் திட்டம் செயல்பட்டால் மட்டுமே மது ஒழிப்பு நடைபெறும். மற்ற மாநிலங்களில் மது ஒழிப்பு இல்லாத நிலையில், நம் மாநிலத்தில் மட்டும் மது ஒழிப்பு கொண்டு வருவது சாத்தியம் இல்லை. தமிழகத்தில் மட்டும் கொண்டு வந்தால் இங்கு கள்ளச்சாராயம் பெருகும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியா முழுவதும் மது ஒழிப்பு நடைமுறையை அமல்படுத்த முயற்சி செய்வார் முதலைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் அனைவரும் அண்ணன், தம்பி என்றுதான் உள்ளோம். இங்கிருக்கும் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடுதான் இருக்கிறார்கள். ஒருவரை பார்த்தவுடன் இவர் எந்த சாதி என வாய்விட்டு கேட்காத நிலையில் உள்ளார்கள். இந்தியாவின் அமைதி பூங்கா தமிழ்நாடு தான். அனைவரையும் சகோதரத்துவம் கொண்டு பார்ப்பது தமிழகம் தான்.
தமிழகத்தில் தலித்துகள் மட்டுமே தாக்கப்படுகிறார்கள் என எந்த புள்ளிவிவரமும் கிடையாது. தலித்துகளை மட்டும் தாக்க வேண்டும் என எவரும் முயற்சி செய்யவில்லை. ஆளுநர் அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும். மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இருவருக்கும் இடையே ஒரு தூதராக அல்லது பாலமாக தான் இருக்க வேண்டும். ஆனால் இங்கு அவர் அரசியல் செய்து கொண்டு இருக்கிறார். அவர் அரசியல் செய்யும் காரணங்களால்தான் இங்கு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதுவரை இந்தியாவில் இருக்கும் எந்த ஆளுநரும் ஒரு பொதுக்கூட்டம் போல் மக்களை கூட்டி பேசியதில்லை.
நாங்கள் ஆளுநர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அவர் பதவி விலக வேண்டும் எனும் நோக்கத்துடன் மட்டுமே. ஆளுநர் ஆர்.என்.ரவி மேகாலயா, பீகார் போன்ற பல்வேறு வட மாநிலங்களுக்கு சென்று அங்கு பணியாற்றியுள்ளார். அவர் மனசாட்சியுடன் மற்ற மாநிலங்களிலும் தமிழகத்திலும் இருக்கும் வித்தியாசத்தை பேச தயாராக இருக்கிறாரா? தமிழகத்தில் இருக்கும் சமத்துவத்துவத்தை போல் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
சூழ்நிலைக்கு ஏற்றவாறு வரிகள் ஏற்றப்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் மதுக்கடைகளை 50% மூடினாலும், அதே நிலை தான் நீடிக்கும். ஆகவே பூரண மதுவிலக்கு தான் மக்கள் முன்னேற்றத்திற்கு உதவும். தமிழகத்தில் போதைப் பொருட்களை உற்பத்தி செய்வதை யாரும் ஆதரிக்கவில்லை. தமிழகத்தில் இருக்கும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும். ஆனால் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவது கடினம். வெளிமாநிலங்களில் இருந்து வரும் போதைப்பொருட்களை நாங்கள் முடிந்தவரை தடுத்து வருகிறோம்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தொடர்ச்சியாக ரெய்டுகள் நடத்தி வருகிறோம். சென்னை மட்டுமில்லாமல் தமிழகத்தில் இருக்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தலித்துகளுக்கு ஆபத்து, அவர்கள் மீது வன்முறை நடைபெறுகிறது என்பது வதந்திகள் மட்டுமே. அனைவரும் அண்ணன், தம்பிகள் போல் இருக்கிறார்கள். எங்காவது அதைப் போன்ற சம்பவங்கள் நடந்தால் அது தடுக்கப்படும்” என சட்டதுறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.