இரண்டு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சகத்தால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கனிம வளம் நிறைந்த நிலப்பகுதிகளுக்கு நில வரி வசூலிப்பது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அதே போல், தமிழ்நாட்டில் உள்ள 28 மாவட்டங்களுக்கு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் ஜனவரி 5ஆம் தேதியுடன் நிறைவு பெற்றதால், அந்த மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்வது தொடர்பான மசோதாவும் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த இரண்டு மசோதாக்களும் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் இருந்த நிலையில், இன்று(மார்ச்.07) ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதாகக் கூறி ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.