கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!
கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் சட்டத் திருத்த மசோதா (தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937) தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 29-ல் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மதுவிலக்குச் சட்டத்தில் உள்ள பிரிவுகளை ஏய்க்கவோ அல்லது செல்லாதபடி செய்வதற்கு உடன்பாட்டாலோ ஓராண்டுக்கு குறையாத மூன்றாண்டுகள் வரை நீட்டிக்கும் சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரத்துக்கு குறையாத ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
மது அல்லது போதையை விளம்பரப்படுத்தினால் சிறைத் தண்டனையும், அபராதமும் இந்த சட்டத் திருத்த மசோதாவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் அருந்துவதால் மரணம் ஏற்பட்டிருந்தால், அந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களுக்கு ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறையும், ரூ.10 லட்சத்துக்கு குறையாத அபராதத் தொகையும் விதிக்க இந்த சட்டத் திருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட இந்த மதுவிலக்கு சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது.