" ஆளுநர் ஒருபோதும் நீதிபதியாக முடியாது " - நியூஸ் 7 தமிழ் கேள்வி நேரத்தில் பத்திரிகையாளர் கார்த்திகேயன் பேச்சு..!
" ஆளுநர் ஒருபோதும் நீதிபதியாக முடியாது “ - நியூஸ் 7 தமிழ் கேள்வி நேரத்தில் பத்திரிகையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த வாரம் திருப்பி அனுப்பிய நிலையில் கடந்த சனிக்கிழமை சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி மசோதாக்களை மீண்டும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டின் 8 கோடி மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உள்ளது. ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு வந்துகொண்டிருக்க முடியாது” என்று வாதங்களை அடுக்கினார்.
இது தொடர்பாக ஆளுநர் vs தமிழ்நாடு அரசு : அதிகாரம் யாருக்கு.? எனும் தலைப்பில் நியூஸ் 7 தமிழ் சார்பாக கேள்வி நேரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிகையாளர் கார்த்திகேயன் தெரிவித்ததாவது..
“ அதிகாரம் நிச்சயமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் உள்ளது. ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைப்பதற்கான முறையான காரணங்களை சொல்லவில்லை. மாறாக மூன்று வார்த்தைகளைத்தான் சொன்னார். இதனால்தான் உச்சநீதிமன்றம் எந்த காரணமும் இன்றி மசோதாவை எப்படி நிறுத்தி வைக்க முடியும் என கேள்வி எழுப்பியது.
இந்த வழக்கில் வலுவான காரணங்களை முன்வைத்து தமிழ்நாடு அரசின் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர்கள் எந்த காரணமும் இல்லாமல் கால வரையரையின்றி ஒரு மசோதாவை நிறுத்தி வைப்பதால் சட்டமன்றத்தின் இறையாண்மை பாதிக்கப்படுகிறது மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஸ்தம்பித்து போகிறது என்கிற வாதத்தை முன்வைத்தனர். இதனை உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
2016 ஆண்டு நபாம் ரேபியா வழக்கில் ” ஆளுநர் ஒரு மசோதாவை காலவரையரையின்றி நிறுத்தி வைக்க முடியாது. அதற்கு தகுந்த காரணங்கள் சொல்லியோ அல்லது தேவைப்பட்டால் மாற்றங்களை பரிந்துரைத்து பதிலாக அனுப்பலாம்” என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இன்றைய வழக்கில் உச்சநீதிமன்ற சொன்ன முக்கியமான தீர்ப்பு என்னவெனில் டிசம்பர் 1ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கி இருப்பது அதுவரை ஆளுநர் 10 மசோதாக்கள் மீது என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை பார்ப்பதற்காகத்தான். ஏனெனில் உச்சநீதிமன்றம் எழுப்பிய முக்கிய கேள்வி என்னவெனில் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்பதாகும். இதற்கு அதிகாரம் இல்லை என மூத்த வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்தனர்.
நவம்பர் 10ஆம் தேதி ஆளுநரின் செயலருக்கு உத்தரவு போட்ட பின்னர்தான் ஆளுநர் தரப்பிலிருந்து 10 மசோதாக்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. அதனால்தான் உச்சநீதிமன்றம் நவம்பர் 10ம் தேதிக்கு ஏன் அவசர அவசரமாக நடவடிக்கை எடுத்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளது.
அதேபோல கேசி.வீரமணி வழக்கில் ஆளுநர் தரப்பிலிருந்து ஜூலை மாதமே முறையான விசாரணை கோப்புகள் தமிழ்நாடு அரசிடம் கோரப்பட்டது. தமிழ்நாடு அரசும் பதில் அளித்த பிறகு அதற்கான விளக்கத்தையும் ஆளுநர் நவம்பர் 10ம் தேதிக்கு பிறகே தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சார்பாக முறையான விசாரணை கோப்புகள் அனுப்பப்பட்ட பின்னரும் முன்னாள் அமைச்சர் மீது விசாரணைக்கு ஒப்புதல் வழங்க ஏன் தாமதம்..? இதற்கும் அரசியலமைப்பிற்கும் என்ன சம்பந்தம்.
அதேபோல ஒத்திசைவுப் பட்டியலில் ஒரு மசோதா இயற்றப்பட்டிருந்தால் அது முரணாக உள்ளது என நீங்கள் கருதினால் அதற்கு முடிவு எடுக்க வேண்டியது ஒரு அரசியலமைப்பு நீதிமன்றமே தவிர ஆளுநர் அல்ல. ஏனெனில் ஆளுநர் நீதிபதியாக முடியாது. எனவே ஆளுநர் எதற்கு இந்த முடிவை எடுக்கிறார்.
சைலேந்திர பாபுவுக்கு ஒரு வருடத்திற்குத்தான் காலம் இருக்கிறதென கூறி தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏன் ஆளுநர் நிராகரித்தார். அதேவேளையில் அமலாக்கத்துறை இயக்குநராக உச்சநீதிமன்றத்தின் வரையறையையும் மீறி எஸ்.கே.மிஸ்ராவுக்கு மத்திய அரசின் Special Task Force க்கு தேவைப்படுகிறார் என மத்திய அரசு பதவிக் காலத்தை நீட்டித்துள்ளது.
எது சரி என தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களால் தேர்ந்தெடுத்த அரசுக்கு மட்டுமே உள்ளது. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள பல்கலைகழகத்திற்கும் தனித்தனி சட்டம் உள்ளது. அந்த சட்டத்தை இயற்றும் அதிகாரம் சட்டப் பேரவைக்குத்தான் உள்ளது. சட்டப்பேரவைக்குத்தான் அதிகாரம் உள்ளது என்பதைத்தான் சமீபத்திய பஞ்சாப் அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் “நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்” என கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது” இவ்வாறு பத்திரிகையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.