வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்ள அரசு உதவி செய்ய வேண்டும் - இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர் ராமச்சந்திரன் பேட்டி..
தடகள வீரர்கள் போல ஸ்குவாஷ் வீரர்களும் வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்ள அரசு உதவி செய்ய வேண்டும் என இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் தலைவர்
என்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 7வது முறையாக தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் இன்று (நவ.17) முதல் நவம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டி தொடர்பாக சென்னை நேரு பூங்காவில் இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பின் நிரந்திர கெளரவ தலைவர் ராமச்சந்திரன் மற்றும் செயலாளர் சைரஸ் போன்ஞ்சா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்திபில் கூறியதாவது,
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்த முறை 5 பதக்கங்களை இந்திய ஸ்குவாஷ் அணி
வென்றது. ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற அபய் சிங், தன்வி கண்ணா,
அனாஹத் சிங் உள்ளிட்டோர், இந்த தொடரில் பங்கேற்கின்றனர். 11 பிரிவுகளின் கீழ்
போட்டிகள் நடைபெறுகிறது. 417 விளையாட்டு வீரர்கள் இந்த தொடரில்
பங்கேற்கின்றனர்.
ஜோஷ்னா சின்னப்பா, சவுரவ் கோஷல் உள்ளிட்டோர் பல ஆண்டுகளாக இந்தியாவிற்காக
பதக்கங்களை வென்று வருகின்றனர். தற்போது அடுத்த தலைமுறை இளம் வீரர்கள் வளர்ச்சி அடைய வேண்டிய காலமாக பார்க்கிறோம்.
இதையும் படியுங்கள்:தமிழ்நாட்டில் 6 முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!
குறிப்பாக 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் ஸ்குவாஷ் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதற்கு ஏற்றவாறு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறோம்.
மேலும், கிராமப்புறங்களில் ஸ்குவாஷ் போட்டிகள் பெரிதாக அறியபடவில்லை என்றாலும் தற்போது மாவட்ட அளவில் ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களை சார்ந்த வீரர்கள் தற்போது உருவாகி வருகின்றனர்.
ஸ்குவாஷ் விளையாட்டை பொறுத்தவரை முன்பு இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில்
வீரர்கள் வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்ள நிதி உதவிகளை செய்து வந்தனர்.
பின்னர் ஒலிம்பிக் விளையாட்டில் ஸ்குவாஷ் இல்லாத காரணத்தால் நிதி
வழங்கப்படாமல் உள்ளது. தற்போது ஒலிம்பிக் தொடரில் ஸ்குவாஷ் சேர்க்கப்பட்டுள்ள
நிலையில் வீரர்கள் வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்ள அரசு உதவிகளை செய்ய
வேண்டும்.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அனைத்து நாடுகளை சார்ந்த வீரர்களும் பயிற்சிகளை
மேற்கொண்டு வருகின்றனர். எனவே இந்தியாவின் வீரர்களும் கோடை காலத்தில்
வெளிநாட்டில் பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்க
உள்ளதாக தெரிவித்தார்.