நெல்லையில் அரசு பள்ளி மாணவன் கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழப்பு - குளிக்க சென்றபோது விபரீதம்!
நெல்லை திசையன்விளை அருகே ஏழாம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கீழத்தெரு பகுதியை சேர்ந்த ஜேக்கப், செவ்வ ரத்தினம் தம்பதியினரின் மகன் ஜெபராஜ் (12). ஏழாம் வகுப்பு பயின்று வந்த ஜெபராஜ் நேற்று (டிச. 21) மதியம் நண்பர்களுடன் சேர்ந்து நந்தன் குளம் பாலத்திற்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே ஜெபராஜின் தாயார் செல்வரத்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து வெகு நேரம் ஆகியும் தனது மகன் வீடு திரும்பாததால் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார்.
பின்னர் ஜெபராஜ் உடன் படிக்கும் நண்பர்களிடம் சென்று விசாரித்துள்ளார். அப்போது ஜெபராஜின் நண்பர் இருவரும் நந்தன்குளம் பாலத்தில் நீர் செல்லும் கால்வாயில் குளிக்க சென்றதாகவும் பின்னர் தன்னை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டு ஜெபராஜ் தனியே சென்றதாக கூறியுள்ளார்.
இதையடுத்து தனது மகன் குளிக்க சென்ற இடத்தில் காணாமல் போனதாக ஜெபராஜின் தாய் செல்வரத்தினம் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்பு படையினர் ஜெபராஜின் சைக்கிள் நிற்கும் பகுதியில் தேடியுள்ளனர்.
இதையடுத்து உயிரிழந்த ஜெபராஜின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.