#Guindy கிங் நோய்த்தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு!
சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய்த்தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் கிண்டியில் உள்ள நோய் தடுப்பு கிங் மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு, ரூபாய் 12 கோடி மதிப்பில் நவீன வகை கருவிகளுடன் மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாதுகாப்பான தரமிக்க மருந்துகள் மட்டுமே சென்றடைய 2024-25ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது. 1948ம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத்தின் மருந்துகளின் தூய்மை மற்றும் பாதுகாப்பு திறன் அறிய நோய் தடுப்பு கிங் மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உயிரியல் பொருள்கள் கட்டுப்பாட்டுத் துறை நிறுவப்பட்டது.
தமிழ்நாடு அரசு மருந்துகள் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்திடமிருந்து ஊசி மூலம் செலுத்தப்படும் அனைத்து மருந்து மாதிரிகள் வாடிக்கையாகவும் இடை சோதனைக்காகவும் பெறப்பட்டு பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. மருந்து சார்ந்த பாதுகாப்பு கண்காணிப்பு, இந்திய இரத்த கண்காணிப்பு திட்டம் போன்ற திட்டங்களின் மருந்து சார்ந்த தீய விளைவுகள் மற்றும் புகார்கள் தன்மை கண்டறிதலும் மேற்கொள்ளப்படுகிறது.
மருந்துகள் மற்றும் அழகு சாதன சட்டம் 1940-ன் படி அட்டவணை C மற்றும் C1 உட்பட ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்து மாதிரிகளை மருந்தியல் தனிவரைவின் படி முழுமையான ஆய்வு புரிந்து தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட மருந்தியல் அரசு பகுப்பாய்வாளரால் முடிவு அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.
இந்த மருந்துகள் தர கட்டுப்பாடு நவீன ஆய்வகத்தினால் இந்திய மற்றும் யுஸ் பார்மகோப்பியா படி மருந்துகளின் விரிவான ஆய்வின் மூலம் அவற்றின் அத்தியாவசியமான தரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
- அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பொதுமக்கள் முக்கியமாக பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் பல இணை நோய்களால் பாதிக்கப்பட்டோர் பயன்பாட்டிற்கு பாதுகாப்பான தரமிக்க மருந்துகள் மட்டுமே சென்றடையும்.
- இந்த நவீன கட்டமைப்புடன் தர மேலாண்மை மிக்க ஆய்வகத்திடமிருந்து நம்பகதன்மையுடன் உள்ள ஆய்வறிக்கை பெறப்படும்.
- இது மருந்துகளுக்கும் மருத்துவ சாதனங்கள் தொடர்புடைய தீவிர எதிர்மறை விளைவுகள், ரத்த பரிமாற்று எதிர்வினைகள், தடுப்பூசிகளுக்குப் பிறகு ஏற்படும் எதிர்மறை விளைவுகள் கண்காணிப்பதில் உதவியாக இருக்கும், இதனால் நோயின் காரணமாக உருவாகும் வியாதி, மரணத்தை மற்றும் மருத்துவமனையில் தங்கும் காலத்தை குறைத்து, நோயினால் உண்டாகும் பொருளாதார சுமையைக் குறைக்கும்.
இந்த முயற்சி தமிழ்நாடு அரசின் மாநிலம் முழுவதும் உயர் தரமான மருத்துவ வசதி மற்றும் மருந்து பாதுகாப்பு குறித்த உறுதிப்பாட்டை மேற்கோள்காட்டுகிறது"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.