“நாட்டு மக்களுக்கு தண்ணீர் கூட தர முடியாதது அரசல்ல.. வெறும் தரிசு..” - கடலூரில் சீமான் பரப்புரை!
நாட்டு மக்களுக்கு தண்ணீர் கூட தர முடியாதது அரசு அரசல்ல.. அது வெறும் தரிசு என கடலூரில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மணிவாசகன், சிதம்பரம் வேட்பாளர் ஜான்சிராணி, பெரம்பலூர் வேட்பாளர் தேன்மொழி ஆகியோரை ஆதரித்து நேற்று (ஏப். 15) கடலூரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மைக் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
“தேர்தல் நேரத்தில் ஆம்புலன்ஸ் சென்றாலே பயமாக தான் உள்ளது. நோயாளிகள் செல்ல வேண்டிய ஆம்புலன்சில் எத்தனை கோடி ரூபாய் செல்கிறதோ? ஆம்புலன்சுகளில் தான் அதிகளவில் பணம் கடத்தப்படுகிறது. நாங்கள் தேர்தலில் தனித்து நிற்பதால் தான் எதற்கும் அஞ்சாமல் துணிந்து பேசுகிறோம். இது தலைவர்களுக்கான தேர்தலா? அல்லது தரகர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலா? என்று மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
இந்தியாவிலேயே அதிகமாக கர்ப்பப்பை வாடகைக்கு விடும் பெண்கள் உள்ள பகுதி குஜராத். அது தான் குஜராத் மாடல். அதுபோல் இந்தியாவில் அதிக திருடர்கள் தலைவர்களாக இருப்பது, தமிழகத்தில் தான். ஓட்டுக்காக காசு கொடுக்கிறவன் பாவி, அதை வாங்கி கொண்டு ஓட்டு போடுகிறவன் தேசத் துரோகி. நாட்டு மக்களுக்கு தண்ணீர் கூட தர முடியவில்லை என்றால் அது அரசு அல்ல, அது வெறும் தரிசு. மைக் சின்னத்திற்கு வாக்களித்து எங்களுக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்”
இவ்வாறு சீமான் பேசினார்.