For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவில் சிலை கட்டுமானத் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை" - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

05:14 PM Dec 15, 2023 IST | Web Editor
 மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவில் சிலை கட்டுமானத் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை    அமைச்சர் எ வ வேலு விளக்கம்
Advertisement

"மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவில் சிலை கட்டுமானத் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை" என  பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் பகுதியில் சிலை கட்டுமான பணி மேற்கொள்ளப்படுவதாக புகார் எழுந்த நிலையில் அது தொடர்பாக  அரசிடம் எந்த திட்டமும் இல்லை என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது..

”சேலத்தில் முன்பு செயல்பட்டு வந்த மாடர்ன் தியேட்டர்ஸின் நுழைவாயிலில் சிலை அமைப்பதற்காக, அந்த இடத்தை கேட்டு,  அரசின் சார்பில் நிர்ப்பந்திக்கப்படுவதாக பத்திரிக்கையில் செய்திகள் வந்துள்ளன.

இந்த நிறுவனம் செயல்பட்டு வந்த 8.9 ஏக்கர் நிலமானது,  தற்போது, மனைகளாகவும், வணிகப் பகுதியாகவும் மாற்றப்பட்டு,  பயன்படுத்தப்பட்டு வருகின்றது.  இந்த பகுதியின் நுழைவாயில் சேலம் ஏற்காடு நெடுஞ்சாலையில் கன்னங்குறிச்சி கிராமத்தின் சர்வே எண்.8-ல் உள்ளது.

இந்த சாலையை விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதால் நெடுஞ்சாலைத்துறை நிலங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்வதற்காக வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களால்,  2.12.2023 அன்று, அளவீடு நடத்தப்பட்டுள்ளது.  இந்த அளவீட்டின் போது மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு முழுமையாக நெடுஞ்சாலைத்துறை நிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.

அரசின் நிலவரை படத்தில் உள்ளவாறு எல்லைகளை வரையறுப்பதற்காக, நெடுஞ்சாலையினுடைய எல்லையில் எந்த சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு, எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன.  மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு தற்போது நெடுஞ்சாலைத்துறையின் நிலத்திலேயே முழுமையாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில்,  பழமையான இந்த முகப்பை பாதுகாத்து,  பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம் என்ற அடிப்படையில்,  இந்தப் பகுதியில்,  வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கோ,  சிலைகளை நிறுவுவதற்கோ அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை.

எனவே,  இந்த நெடுஞ்சாலைத்துறை இடம் தவிர வேறு இடத்தைக் கேட்டு அரசுத்தரப்பில் நிர்ப்பந்திப்பதாக வெளிவரக்கூடிய தகவல்கள் அனைத்தும் தவறானவை என தெளிவுபடுத்தப்படுகிறது. “ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement