7 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பா... அறுவை சிகிச்சையின்றி அகற்றிய அரசு மருத்துவர்கள்!
ஏழு மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பாவை, அறுவை சிகிச்சையின்றி அகற்றிய காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் மேட்டுப்பாளையம், ஆளவந்தார் மேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் அஜித் - டயானா தம்பதி. இவர்களுக்கு பிறந்து 7 மாதங்களே ஆன குகனேஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குகனேஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, தவறுதலாக ஒன்றரை இன்ச் சுற்றளவு அகலம் கொண்ட தைல டப்பாவை எடுத்து வாயில் வைத்துள்ளான்.
தொடர்ந்து அந்த டப்பாவை வெளியே துப்ப தெரியாமல், வாயிலேயே வைத்து உலப்பியுள்ளான். அப்போது அந்த தைல டப்பா குழந்தையின் தொண்டைக்குள் சென்று பலமாக சிக்கியுள்ளது. இதனையடுத்து குழந்தை வலியில் அழுதுள்ளான். குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு வந்த பெற்றோர், அவனைத் தூக்கி ஏன் அழுகிறான் என பார்த்துள்ளனர். என்னவென்று பார்ப்பதற்குள் குழந்தையின் வாயிலிருந்து குபு குபுவென ரத்தம் கொட்டியுள்ளது.
இதனைப்பார்த்து அச்சமடைந்த பெற்றோர், குழந்தையை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், நிலையை கருத்திற்கொண்டு சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்ப திட்டமிட்டனர்.
ஆனால் சென்னை செல்வதற்கு 1 மணிநேரம் ஆகும் என்பதை உணர்ந்த மகப்பேறு குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர் பாலாஜி மற்றும் காது, மூக்கு, தொண்டை பிரிவு மருத்துவர் மணிமாலா ஆகியோர், குழந்தையின் தொண்டையில் இருக்கும் டப்பாவை எவ்வாறு வெளியே எடுப்பது என யோசித்தனர். பின்னர் குழந்தையை மென்மையாக தூக்கி பிடித்து, நுணுக்கமாக செயல்பட்டு தொண்டைக்கும், மூச்சு குழலுக்கும் இடையில் பலமாக சிக்கி இருந்த தைல டப்பாவை குரல்வளை காட்டி என்ற முறை மூலம் லாவகமாக வெளியே எடுத்தனர்.
தைல டப்பாவை தொண்டையில் இருந்து எடுத்த பின்னர் குரல்வளைக்கும், தொண்டைக்கும்
எந்தவிதமான சேதமும் இல்லை, குழந்தையின் உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து குழந்தையை கண்காணித்து வருகின்றனர்.
சமீபகாலமாக அரசு தலைமை மருத்துவமனையில் சரியான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வரும் நிலையில், 7 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பாவை, அறுவை சிகிச்சை இன்றி மிக லாவகமாக எடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.