Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பீகாரில் 5 மணி நேரத்தில் ஆட்சி அமைந்தது... ஜார்க்கண்டில் 22 மணி நேரமாகியும் தகவல் இல்லை...” - மஹுவா மாஜி குற்றச்சாட்டு

07:41 AM Feb 02, 2024 IST | Jeni
Advertisement

ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தவுடன், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் சென்று ஆட்சி அமைப்பது குறித்து உரிமை கோரிய நிலையில், 22 மணி நேரம் ஆகியும், எந்த தகவலும் இல்லை என்று ஜே.எம்.எம் எம்.பி. மஹுவா மாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

ஜார்க்கண்டில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இருந்தார். இதனிடையே, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும், இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத நிலையில், கடந்த ஜன.20-ம் தேதி அமலாக்கத்துறை முன் ஹேமந்த் சோரன் ஆஜரானார். அவரிடம் வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து இரண்டு தினங்களுக்கு முன் டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 36 லட்சம் ரூபாய் பணம் மற்றும் பி.எம்.டபிள்யூ. கார் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இதனை அடுத்து அமலாக்கத்துறை மீது முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். டெல்லியில் உள்ள தனது வீட்டில் அமலாக்கத்துறை சட்டவிரோதமாக சோதனை நடத்தி பொருட்களை எடுத்துச் சென்றதாக ஹேமந்த் சோரன் புகார் அளித்தார். அதன்பேரில் அமலாக்கத்துறை மீது ஜார்க்கண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து,  ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் விலகினார். அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனை அடுத்து ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பான சூழலில் ஹேமந்த் சோரனின் அமைச்சரவையில், அமைச்சராக இருந்த சம்பாய் சோரன், புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : ‘ஸ்குவிட் கேம் 2’ ரிலீஸ் எப்போது..? - புதிய அப்டேட்..! 

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. மஹுவா மாஜி, “ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தவுடன், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் சென்று ஆட்சி அமைப்பது குறித்து உரிமை கோரினோம். 22 மணி நேரம் ஆகியும், எந்த தகவலும் இல்லை. ஆனால் பீகாரில் 5 மணி நேரத்தில் ஆட்சி அமைந்தது. இது பாஜகவின் நோக்கம் என்ன என்பது குறித்த கேள்வியை எழுப்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
BJPHemantSorenJMMMahuaMajimp
Advertisement
Next Article