மீண்டும் உயிர் பெற்ற ‘GOT’ ஓநாய் - குளோனிங் முறையில் அழிந்த உயிரினத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை!
அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த ஒரு உயிரி தொழில்நுட்ப நிறுவனமான கொலோசல் பயோசயின்சஸ்-ன் விஞ்ஞானிகள், சுமார் 12,500 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன ஒரு கொடிய ஓநாய் (Dire Wolf ) இனத்தை மரபணு பொறியியல் மூலம் மீண்டும் உயிர் பெறச் செய்துள்ளனர்.
கொலோசல் பயோசயின்சஸ் நிறுவனம், 13,000 முதல் 72,000 ஆண்டுகள் பழமையான ஓநாய் எச்சங்களில் இருந்து பெறப்பட்ட டிஎன்ஏ-வை பயன்படுத்தி சாம்பல் ஓநாய்களின் டிஎன்ஏ உடன் இணைத்து இரண்டு குட்டி ஓநாய்களை உருவாக்கியுள்ளனர். அந்த குட்டிகளுக்கு ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது 6 மாத வயதுடைய இந்த குட்டிகள் நான்கு அடி உயரமும் 36 கிலோகிராம் எடையும் கொண்டுள்ளது. இந்த வகை ஓநாய்கள் படிமங்களாக முன்பு அறியப்பட்ட நிலையில், கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் காட்சிபடுத்தப்பட்டு பிரபலபடுத்தப்பட்டது.
இந்த அறிவியல் முன்னேற்றம் மரபணு பொறியியலில் ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது. இது கம்பளி மம்மத், டோடோ மற்றும் டாஸ்மேனியன் புலி போன்ற அழிந்துபோன பிற உயிரினங்களை திரும்ப கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது. கொலோசல் பயோசயின்சஸ் நிறுவனத்தின் இந்த சாதனை, அழிந்த உயிரினங்களை மீண்டும் உயிர்பெறச் செய்வது குறித்து மேலும் ஆராய்ச்சி செய்வதற்கு வழிவகுத்துள்ளது.