புனித வெள்ளி - கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிப்பாடு!
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையுண்ட நாளை நினைவு கூரும் வகையில், இன்று, புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிருஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாகவும் அந்த நாட்களை தான் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாகக் கடைபிடிக்கின்றனர்.
கடந்த மாதம், 5ம் தேதி சாம்பல் புதன் நிகழ்வுடன் தவக்காலம் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சிலுவைப்பாதை ஆராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டன. நேற்று, தவக்கால நிகழ்வின் முக்கிய நாட்களின் துவக்கமான, புனித வியாழன் அனுசரிக்கப்பட்டது.
ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்படுவதற்கு முன், தன் சீடர்களின் பாதங்களை கழுவினார். இதை உணர்த்தும் வகையில், தேவாலய குருக்கள், 12 பேரை சீடர்களாக அமர வைத்து, அவர்களின் பாதங்களை கழுவினர். இந்த நிலையில் இன்று புனித வெள்ளியை முன்னிட்டு ஏசுவின் சிலுவை பாடுகள், அவை உணர்த்தும் நற்செய்தி குறித்த ஆராதனை, தேவாலயங்களில் நடைபெற்றது.
இந்த நிலையில் சென்னையில் அனைத்து தேவாலயங்களிலும் இன்று புனித வெள்ளியையொட்டி சிறப்பு ஆராதனைகளும், திருப்பலிகளும் நடைபெறும். இதன் ஒரு பகுதியாக சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள தேவாலயத்தில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெற்றது.
இந்த சிறப்பு வழிபாடு ஆராதனையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அப்போது மதபோதகர் மோகன் தலைமையில் சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து நாளை மறுநாள் ஏசுவின் உயிர்ப்பை நினைவுகூரும் ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.