2024 ரயில்வே தேர்வு மூலம் "இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு" - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!
2024 ஆம் ஆண்டு ரயில்வே தேர்வுகள் மூலம் இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
ரயில்வே துறையில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான ஆண்டு அட்டவணை பிப். 3-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், 'துணை ரயில் ஓட்டுநர்கள் பணிக்கான தேர்வு அறிவிக்கை ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் வெளியிடப்படும். தொழில்நுட்பம் சார்ந்த பணியிடங்களுக்கான அறிவிக்கை ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் வெளியிடப்பட உள்ளன.
இதையும் படியுங்கள் : பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ்-க்கு புற்றுநோய் பாதிப்பு!
இளநிலை பொறியாளர், தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கு ஜூலை முதல் செப்டம்பர் காலகட்டத்திலும், அமைச்சரவை பணியிடங்கள், நிலை-1 போன்ற பணிகளுக்கான அறிவிக்கை அக்டோபர்-டிசம்பர் காலகட்டத்திலும் வெளியிடப்படும்' என தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
"பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை ஆண்டுக்கு நான்கு முறை வெளியிடப்படவுள்ளது. இதன்மூலம் எண்ணற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
முன்பு, மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டதால் வயதுவரம்பின் காரணமாக ஏராளமானோர் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்தனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள விரிவான அட்டவணையின் மூலம் இளைஞர்கள் பயன்பெற உள்ளனர்" இவ்வாறு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.