ஷாக் கொடுத்த தங்கம் விலை... ஒரே நாளில் ரூ.1,200 உயர்வு... ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.
அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இதற்கிடையே, கடந்த 21ம் தேதி தங்கம் விலை 60 ஆயிரத்தை கடந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் படிப்படியாக உயர்ந்து தங்கம் விலை 68 ஆயிரத்தை தொட்டது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏறி, இறங்கி வருகிறது.
அந்த வகையில், தங்கம் விலை 5 நாட்களில் சவரனுக்கு ரூ.2,680 வரை சரிந்து ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையே, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.8290க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.66,320க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து, தங்கம் விலை நேற்று மதியம் 2வது முறையாக உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.8,410-க்கும், சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.67,280-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று (ஏப்.10) ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலைகிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.8,560-க்கும், சவரனுக்கு ரூ.1200 உயர்ந்து ரூ.68,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.3 உயர்ந்து ரூ.107-க்கு விற்பனையாகிறது.