புத்தாண்டில் குறைந்த தங்கத்தின் விலை - இன்றைய நிலவரம் தெரியுமா?
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்து 57,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது.
சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 7260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 7215 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 58 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் 360 ரூபாய் குறைந்து 57 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 100 ரூபாயாக இருந்தது. தற்போது, கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.