உச்சத்தில் தங்கம் விலை... சவரன் ரூ.60,440க்கு விற்பனை!
சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அதனடிப்படையில் கடந்த ஆண்டு திடீரென வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கம் விலை ரூ.50,000-த்தை தொட்டது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
கிட்டத்தட்ட கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சவரனுக்கு ரூ15,000 வரை உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத்தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு சவரன் ரூ.60,000 தொட்டு தங்கம் விலை அதிர்ச்சியை தந்தது.
அந்த வரிசையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்து 440-க்கும், கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7ஆயிரத்து 555-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கடந்த சில நாட்களாக மாற்றமின்றி விற்பனையான நிலையில் இன்று விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 105 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.