பறிபோன தங்கப் பதக்க கனவு - ஒலிம்பிக்கில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம்!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 50 கிலோ மல்யுத்த போட்டியின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கபட்டுள்ளார்.
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த 26 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. இதுவரையில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி உள்ளது. எனினும், தங்கமோ, வெள்ளியோ கைப்பற்றவில்லை.
பாரிஸ் ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்கி, ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஜப்பானைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை உள்பட 3 வீராங்கனைகளின் சவாலை முறியடித்த வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதையும் படியுங்கள் : அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இன்று அவர் இறுதிப்போட்டியில் விளையாட இருந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள வினேஷ் போகத் போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகளவு இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். இந்த அறிவிப்பு இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால், 50 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு வழங்கப்பட்டது. வெள்ளிப்பதக்கம் யாருக்கும் அளிக்கப்படவில்லை.