For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"தங்கம் தென்னரசு டெல்லியை கைக்காட்டி தப்பிக்க முயல்கிறார்" - #EPS பதிலடி

அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லி பக்கம் கையை நீட்டி தப்ப முயல்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  
05:31 PM Jan 23, 2025 IST | Web Editor
 தங்கம் தென்னரசு டெல்லியை கைக்காட்டி தப்பிக்க முயல்கிறார்     eps பதிலடி
Advertisement

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜன.22) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை, திமுக அரசு இன்றுவரை வழங்கவில்லை. புத்தாண்டு பிறந்த ஜனவரி மாதத்தில், பல மாவட்டங்களில் இதுவரை 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படவில்லை என்றும் செய்திகள் வருகின்றன” என்று கூறியிருந்தார்.

Advertisement

இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, "100 நாள் வேலைத் திட்டம் என்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை" எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லி பக்கம் கையை நீட்டி தப்ப முயல்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது,

"100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகளுக்கு இரண்டு மாதங்களாக முதலமைச்சர் திமுக அரசு சம்பளம் வழங்காததைச் சுட்டிக்காட்டினால், தங்களது வழக்கமான பாணியான "மேலே இருக்கிறவன் பார்த்துப்பான்" என்பது போல டெல்லி பக்கம் கையை நீட்டி தப்பிக்க முயல்கிறார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. ஏதோ திமுக ஆட்சி அமைத்த பிறகு தான் மத்திய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது போன்று அமைச்சர் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

எந்த தேசிய கட்சி ஆட்சியில் இருந்தாலும், நமக்கு முறையாக நிதி வழங்குவது இல்லை என்பதை நான் எப்போதும் சொல்லிவரும் கருத்து தான். மத்திய அரசின் நிதியைப் பெற்றும் சரி; மத்திய அரசிடம் இருந்து நிதி வராதபோதிலும் சரி- மக்களுக்கு சேரவேண்டிய திட்டங்களில் எந்த தொய்வும் அஇஅதிமுக ஆட்சியில் ஏற்பட்டதில்லை. அப்படியொரு நிர்வாகத் திறமிக்க ஆட்சியை நாங்கள் நடத்தினோம். உங்களைப் போன்று எதற்கெடுத்தாலும் டெல்லியை கைகாட்டும் ஆட்சி நடத்தவில்லை.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நாணய வெளியீட்டிற்கு மத்திய பாஜக அமைச்சரை அழைத்து வரத் தெரிந்த உங்களுக்கு, 39 எம்.பி.க்கள் இருந்தும், உரிய அழுத்தம் கொடுத்து தமிழ்நாட்டிற்கான நிதியை பெறாதது ஏன்? உங்களுக்கு மத்திய அரசிடம் உரிய நிதியைப் பெறுகின்ற நிர்வாகத் திறன் இல்லையென்றால், அதனை ஒப்புக்கொள்ளுங்கள், நாங்கள் ஆட்சியில் இருந்த போது நிதிகளை முறையாகப் பெற்று நிறைவான ஆட்சி செய்தோம் என்பதை நினைவில் கொள்க..!"

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement