அமெரிக்காவில் குடியேற 43 கோடியில் கோல்டு கார்ட் - அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு !
அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் குடியேறுபவர்கள் மீது கடுமையான போக்கை கொண்டுள்ளார். மேலும் ஆவணமின்றி சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை நாடு கடத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் மறுபுறம் தொழில்நுபட்பத்துறைக்கு திறமையானவர்கள் அமெரிக்காவுக்கு வேண்டும் என்பதால் HB1 வேலை விசாவை அதிபர் டிரம்ப் ஆதரித்து பேசினார்.
இதற்கிடையே அமெரிக்காவில் தொழில் மேற்கொள்ளும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) பெற அனுமதிக்கும் "LB-5" இமிக்ரன்ட் விசாவை ஒழிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். LB-5 விசாவுக்கு பதிலாக அமெரிக்காவுக்கு குடியேறும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பணக்கார வெளிநாட்டவருக்காக டிரம்ப் தங்க அட்டை திட்டத்தை அறிவித்துள்ளார். கோல்டன் கார்டு எனப்படும் இது நிரந்தர குடியுரிமை வழங்கும் கிரீன் கார்டின் பிரீமியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து பேட்டி அளித்த அதிபர் டிரம்ப், "நாங்கள் ஒரு தங்க அட்டையை விற்கப் போகிறோம். அந்த அட்டைக்கு 5 மில்லியன் டாலர்(சுமார் 43 கோடி ரூபாய்) விலையை நிர்ணயம் செய்யப் போகிறோம்" என்று கூறினார். இந்த கோல்டன் கார்டு திட்டத்தின் மூலம் அமெரிக்காவின் கடன் சுமை குறையும் என்பது அவரது கருத்து.
மேலும் டிரம்ப் அரசின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறுகையில், தங்க அட்டை உண்மையில் ஒரு வகையான கிரீன் கார்டாக இருக்கும். டிரம்பின் இந்த புதிய "கோல்டன் கார்டு' திட்டம் தற்போதுள்ள EB-5 திட்டத்தை மாற்றப் போகிறது. இதன் மூலம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமெரிக்க வணிகங்களில் முதலீடு செய்வதன் மூலம் கிரீன் கார்டு பயன்களை பெற முடியும். 'கோல்டன் கார்டு' மூலம் பெறப்படும் பணம் நேரடியாக அரசாங்கத்திற்குச் செல்லும் என்று தெரிவித்துள்ளார்.