ரூ.5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை - களைகட்டிய பென்னாகரம் வாரச்சந்தை!
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வாரச்சந்தையில் 5 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாகி உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வாரச்சந்தையாக பென்னாகரம் வாரச்சந்தை உள்ளது. இந்நிலையில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விழா காலங்களில், இந்த சந்தையில் கோடி கணக்கான ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாவது வழக்கம்.
பென்னாகரம், அதிகம் வனப்பகுதியைச் சார்ந்த பகுதி. இதனால் இந்தப் பகுதியில்
இருக்கும் ஆடுகளுக்கு தனி சிறப்பு உண்டு. மேலும் அதிக சுவை தரக்கூடிய ஆடுகளாகவும் உள்ளது. இதன் காரணமாக பென்னாகரம் பகுதியில், விழா காலங்களில் ஆடுகள் விற்பனை அதிகமாக நடைபெறும்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை தொடங்கியதை தொடர்ந்து, இன்று பென்னாகரம் பகுதியில் உள்ள ஆடுகளை வாங்குவதற்கு சேலம், ஈரோடு, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகின்றனர். மேலும் ஆந்திராவின் சித்தூர், கர்நாடகாவின் பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்தும் வந்த வியாபாரிகளும் அதிகமான ஆடுகளை வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
காலை 3 மணிக்கு தொடங்கிய ஆட்டு விற்பனை, சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல்
விற்பனையானது. ஒவ்வொரு ஆடும் ரூபாய் 10000 முதல் 15000 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் பென்னாகரம் பகுதி ஆடு வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆடுகளின் விலை அதிகமாய் இருந்ததாலும், வெளியூர் வியாபாரிகள் அதிகம் குவிந்ததாலும், உள்ளூர் பொதுமக்கள் ஆடுகளை வாங்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.