#GOAT திரைப்பட சிறப்புக் காட்சிகளுக்கு கிடைக்குமா அனுமதி?
கோட் திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சி அனுமதி வழங்குவது தொடர்பான அரசாணை நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
‘லியோ’ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளது. இது விஜய் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் முதல் படமாகும். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.
இந்த திரைப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த சூழலில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் 4-வது பாடலான ‘மட்ட’ பாடல் கடந்த 2ம் தேதி வெளியானது. இப்பாடல் இணையத்தில் வைரலானது. இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி உள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் புரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முதல்நாள் முதல் காட்சிகளைப் பார்க்க பலரும் போட்டிபோட்டு கொண்டு டிக்கெட் வாங்கி வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : “மாநில பாடத் திட்டம் குறித்து #Governor கூறிய பிழையான கருத்தைத் திரும்ப பெறவேண்டும்” – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வலிறுத்தல்!
தற்போது வரை சிறப்புக் காட்சி குறித்து தமிழ்நாடு அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில் விஜய் ரசிகர்களிடையே குழுப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கோவை பிராட்வே சினிமாஸில் காலை 7.25 மணி காட்சிக்கான முன்பதிவு தொடங்கியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கோட் திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிக்கான அனுமதி வழங்குமாறு தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை விடுத்த நிலையில் தமிழ்நாடு அரசு தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. கோட் திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சி அனுமதி வழங்குவது தொடர்பான அரசாணை நாளை வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.