#GOAT | விஜய் திரைப்படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? -விசிக எம்.பி. ரவிக்குமார் கண்டனம்...
GOAT திரைப்படத்தின் தலைப்பில் சனாதனம் இருப்பதாக விசிக எம்.பி. ரவிக்குமார் கண்டனம் எழுப்பியுள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (GOAT – Greatest Of All Times) இன்று வெளியாகியுள்ளது. இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கோட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு, அதாவது காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை 5 காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 1100 திரைகளில் காலை 9 மணிக்கு படம் திரையிடப்பட்டது. வடமாநிலங்களில் 1000 திரைகளிலும் மற்றும் பிற அண்டை மாநிலங்களிலும் காலை 4 மணி முதல் கோட் திரைப்படம் திரையிடப்பட்டது. வெளிநாடுகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 6000 திரைகளில் கோட் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வெளியாவதற்கு முன்பே கோட் படம் மற்ற மாநிலங்களில் திரையிடப்படுவதால், வழக்கம் போல் மற்ற மாநிலத்திற்கு அதிகாலை முதலே ரசிகர்கள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் தற்போது தமிழ்நாட்டில் திரைப்படம் வெளியானதை விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், GOAT படத்தின் தலைப்பில் சனாதனம் இருப்பதாக விசிக எம்.பி. ரவிக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
“விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? ‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்! ‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா? எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே...” என தெரிவித்துள்ளார்.