“GOAT திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடியில் சேர்க்கப்பட்டு வெளியிடப்படும்” - போனஸ் கொடுத்த வெங்கட் பிரபு!
கோட் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை படம் வெளியான பிறகு சமூக வலைதளத்தில் வெளியிட இருப்பதாகவும், நீக்கப்பட்ட ஒட்டுமொத்த காட்சிகளும் படத்தில் சேர்க்கப்பட்டு ஓடிடியில் வெளியாகும் எனவும் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
‘லியோ’ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் நாளை (செப். 5) வெளியாக உள்ளது. இது விஜய் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் முதல் படமாகும். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.
இந்த திரைப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது. இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி உள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் புரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முதல்நாள் முதல் காட்சிகளைப் பார்க்க பலரும் போட்டிபோட்டு கொண்டு டிக்கெட் வாங்கி வருகின்றனர்.
இப்படத்திற்கு சென்சார் வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் என முதலில் முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் பின் 3 மணி நேரம் மூன்று நிமிடங்கள் என அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் மகனாக நடித்துள்ள கதாபாத்திரம் நிறைய சேட்டைகள் செய்வது போல் உருவாக்கப்பட்டுள்ளதாம். ஆனால் நேரக்கட்டுப்பாடு காரணமாக நிறைய காட்சிகளை படத்தில் இருந்து நீக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
எனவே, இப்படத்தின் நீக்கப்பட்ட 18 நிமிட காட்சிகளை படம் வெளியான பிறகு சமூக வலைதளத்தில் வெளியிட இருப்பதாகவும், மேலும் நீக்கப்பட்ட ஒட்டுமொத்த காட்சிகளும் ஓடிடியில் வெளியாகும் போது, படத்தில் சேர்க்கப்படும் எனவும் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு உற்சாகத்தை கொடுத்துள்ளது. தி கோட் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.