GNI SUMMIT 2024 : Google-ன் "தலைவா" விருது பெற்ற நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல்!
டெல்லியில் நடைபெற்ற Google News India summit 2024 நிகழ்வில், பிராந்திய மொழியில் உண்மை சரிபார்ப்பு செய்திகளை அதிக அளவில் வெளியிட்டதற்காக நியூஸ் 7 தமிழ் டிஜிட்டலுக்கு Google-ன் "தலைவா" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
Google News initiatives செய்தி வெளியீட்டாளர்களுக்கு செயல்படுத்திய GNI இந்திய மொழிகள் திட்டம், LGBTQ+ சமூகத்தின் பால் புதுமையினர்களின் பிரச்னைகளை பேசும் Inqlusive Newsroom Fellowship, தேர்தல் நேரத்தில் உண்மை செய்தி சரிபார்ப்பு திட்டமான Shakti Collective ஆகிய 3 திட்டங்களிலும் நியூஸ் 7 தமிழ் பங்கேற்றது.
Shakti Collective திட்டமானது இந்தியாவின் பொதுத்தேர்தலின் போது பொதுமக்கள் சரியான தகவல்களை அறிந்து கொள்ளும் விதமாக போலி செய்திகளை கண்டறிந்து அதன் உண்மை தன்மையை உணர்த்தும் விதமாக வடிவமைக்கப்பட்டது. இந்த திட்டத்தை GNI மற்றும் Data Leads நிறுவனம் இணைந்து சர்வதேச உண்மை செய்தி சரிபார்ப்பு வல்லுநர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்றது.
இதில் 300-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களின் பங்களிப்புடன் 50 செய்தி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 28 மாநிலங்களில் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் Shakti Collective திட்டமானது செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் மட்டுமே தேர்வானது.
மதம், இனம்,மொழி அடிப்படையில் மக்களிடையே சர்ச்சைகளை ஏற்படுத்தும் நோக்கில் பரப்பப்பட்ட போலி செய்திகளை கண்டறிந்து சரிபார்த்து தேர்தல் சமயத்தில் ஒன்றரை மாத காலம் உண்மை செய்திகளை உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக, உண்மை சரிபார்ப்பு செய்தி வெளியீட்டாளர்கள் தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியிட்ட செய்திகளை நியூஸ் 7 தமிழ் இணையதளத்தில் செய்தியாகவும் அதன் சமூக வலைதளங்களில் வீடியோக்களாகவும் மறு வெளியீடு செய்தது.
இந்த திட்டத்திற்கு DataLEADS நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும், உண்மை செய்தி சரிபார்ப்பு வல்லுநருமான சோனியா பாஸ்கர் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு அவருடன் DataLeads குழுவினரும் சிறப்பான வழிகாட்டுதலை வழங்கினர்.
இந்த திட்டத்தில் News7 Tamil டிஜிட்டல் பிரிவு 141 செய்திகளை மறுவெளியீடு செய்து பிராந்திய மொழிகளில் அதிக செய்திகளை மறுவெளியீடு செய்த நிறுவனங்களில் முதன்மை இடத்தை பெற்றது.
இதனை கவுரவிக்கும் வண்ணம், டெல்லியில் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெற்ற Google India News summit 2024 நிகழ்வில் நியூஸ்7 தமிழுக்கு சிறந்த பிராந்திய மொழி செய்தி வெளியீட்டாளர் - Google-ன் "தலைவா" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த விருதினை இந்தியாவின் Google News Partnership தலைவர் துர்கா ரகுநாத் வழங்க நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு தலைவர் சுகிதா சாரங்கராஜ் பெற்றுக் கொண்டார்.
ஊடக உலகில் முன்னணியில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு, Google-ன் "தலைவா" விருதை பெற்றது நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு.