காயம் காரணமாக பஞ்சாப் அணியில் இருந்து கிளென் மேக்ஸ்வெல் விலகல்!
நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் பஞ்சாப் அணி, இதுவரை 10 போட்டிகளில் விளையாடி, 6-ல் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பஞ்சாப் அணி 13 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் அணியின் ஆல் ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் தற்போது காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என பஞ்சாப் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பஞ்சாப் அணி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கிளென் மேக்ஸ்வெல் இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையே நேற்று(ஏப்.30) நடைபெற்ற போட்டியின்போது ஸ்டோய்னிஸ் அளித்த பேட்டியில், பயிற்சியின்போது கிளென் மேக்ஸ்வெல் விரலில் எழும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவித்தார். மேலும் இது குறித்து பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், அவருக்கு பதில் சில மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் 4.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல், ஆறு போட்டிகளில் பங்கேற்று 48 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.