"உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்" - இளநிலை மருத்துவர்களுக்கு #MamataBanerjee வலியுறுத்தல்!
கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம் தொடர்பாக இளநிலை மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தப் படுகொலைக்கு நீதி கேட்டு பயிற்சி மருத்துவர்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இளநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், கடந்த செப். 16ம் தேதி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது மருத்துவர்களின் கோரிக்கை முழுகையாக ஏற்கப்படாத காரணத்தினால், மருத்துவர்களின் போராட்டம், உண்ணாவிரத போராட்டமாக மாறியது.இன்றுடன் 15 வது நாளாக இளநிலை மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்களிடம் தொலைபேசி மூலம் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது,
"அனைவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது. ஆனால் அது சுகாதார சேவைகளை பாதிக்கக்கூடாது. தயவு செய்து உண்ணாவிரதத்தை கைவிடுங்கள். உங்கள் கோரிக்கைகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற எனக்கு இன்னும் 3 அல்லது 4 மாதங்கள் அவகாசம் கொடுங்கள். சில கோரிக்கைகளுக்கு கொள்கை முடிவுகள் தேவை. நாங்கள் முழு அளவில் ஒத்துழைப்போம் ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆணையிடுவது ஏற்கத்தக்கது அல்ல."
இவ்வாறு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.