ஆளுநருக்கு நாளை வரை கெடு | பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சொத்து குவிப்பு வழக்கில் கிழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்காலிகமாக தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, அமைச்சராக பொன்முடி தொடரலாம் எனவும் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார்.
ஆனால் உச்ச நீதிமன்றம், தீர்ப்பை நிறுத்தி வைத்திருக்கிறதே தவிர, அவரை குற்றவாளி அல்ல என கூறவில்லை என்பதால், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி தமிழ்நாடு ஆளுநர் செயல்படுவது நீதிமன்ற அவமதிப்பாகும் என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது. பதவிப்பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் எனக் கூறியுள்ளது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. அப்போது, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்த ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆளுநர் என்ன செய்து கொண்டுள்ளார் எனவும், நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப்பிரமாணம் செய்ய முடியாது என கூற முடியும் எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த விவகாரத்தில் கடுமையான கருத்துக்களை கூற வேண்டி இருக்கும் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் எச்சரித்தார்.
நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு, நாளைக்குள் பதிலளிப்பதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது இந்த விவகாரத்தை நீதிமன்றம் எளிதாக எடுத்துக்கொள்ளவில்லை என தெரிவித்த நீதிபதி, நாளை வரை பதலளிக்க அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். மேலும் நாளைக்குள் பதிலளிக்காவிட்டால் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் எனவும் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்தனர்.