"ஜனநாயக நெறிகளைக் கடைப்பிடித்து நல்லாட்சி தருக" - ப.சிதம்பரம்
நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்ட நிலையில், நாடாளுமன்ற ஜனநாயக நெறிகளைக் கடைபிடித்து நல்லாட்சி வழங்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று (ஜூன் 9) டெல்லியில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதனால் அந்நகரமே விழாக்கோலம் பூண்டது. இவ்விழாவில், உலக தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு மாநில கவர்னர்களும் கலந்துகொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதனைத்தொடர்ந்து கேபினட் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சி இரவு 10 மணியளவில் முடிவடைந்தது. இதனையடுத்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "இந்தியக் குடிமகன் என்ற முறையில் நேற்றுப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அரசுக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாராளுமன்ற ஜனநாயக நெறிகளைக் கடைப்பிடித்து நல்லாட்சி தருக!" என பதிவிட்டுள்ளார்.