ராஜஸ்தானில் தெரு நாய்கள் கடித்து 7 வயது சிறுமி உயிரிழப்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் தெரு நாய்கள் கடித்து 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியைச் சேர்ந்தவர் சிறுமி இக்ரானா(7). இந்நிலையில் இக்ரானாவும் அவளது தோழிகள் 5 பேரும், இக்ரானா தாத்தாவுடன் நேற்று வயலுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர் குழந்தைகளை அங்கேயே பத்திரமாக இருக்குமாறு கூறிவிட்டு, சந்தைக்கு சென்றுள்ளார்.
சிறிதுநேரம் கழித்து குழந்தைகள் அனைவரும் அவர் வராமலே வீடு திரும்பியுள்ளனர். அப்போது அங்கு வழியில் நின்ற தெரு நாய்கள் இக்ரானை கூட்டமாக சேர்ந்து தாக்கியுள்ளன. இதனால் பலத்த காயம் அடைந்த இக்ரானா ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.
இக்ரானாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் வந்து பார்த்துள்ளனர். உடனே இக்ரானை டிராக்டரில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே இக்ரானா உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இக்ரானை தாக்கிய தெருநாய்கள் இதற்கு முன்பும் பல விலங்குகளை தாக்கியதாகவும், அவை வெறி பிடித்து சுற்றுவதாகவும் அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நகராட்சி ஊழியர்களிடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சிறுமி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாய்களின் நடமாட்டம் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.