For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விவேகானந்தர் மண்டபத்தின் மேலே "MODI AGAIN" என்கிற ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டதா? - வைரலாகும் காணொலி உண்மையா?

08:23 AM Jun 03, 2024 IST | Web Editor
விவேகானந்தர் மண்டபத்தின் மேலே  modi again  என்கிற ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டதா    வைரலாகும் காணொலி உண்மையா
Advertisement

This news Fact checked by Newsmeter

Advertisement

"MODI AGAIN" என்று வாசகம் பொறிக்கப்பட்ட ராட்சத பலூன்கள் விவேகானந்தர் மண்டபத்தின் மேலே பறக்க விடப்பட்டதாக சமூக வலைதளங்களில் காணொலி மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத் தன்மை குறித்து நியூஸ் மீட்டர் செய்தி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இது குறித்து விரிவாக காணலாம். 

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையும் வைரல் வீடியோவும்

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாட்கள்(மே 30 முதல் ஜூன் 2 வரை) தொடர்ந்து தியானம் செய்தார்.  வாரணாசியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு வந்த பிரதமர் மோடி அங்கிருந்து MI-17 வகை ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு சென்றார்.  கடல் நடுவே இருக்கும் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் மூன்று நாள் தியானத்தை முடித்தார். இதன் பின்னர் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.

பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையைத் தொடர்ந்து  "இனிமே கருப்பு பலூன் எல்லாம் விட முடியாது Only MODI AGAIN.  400 PAAR MODI SARKAR" என்ற கேப்ஷனுடன் புகைப்படம் மற்றும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தின் மேலே "MODI AGAIN" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ராட்சத விமானம் வடிவிலான பலூன்கள் பறப்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.

Modi Again ராட்சத பலூன்கள் - உண்மை என்ன?

"MODI AGAIN" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ராட்சத விமானம் வடிவிலான பலூன்கள் பறப்பது போன்று பரவிய செய்திகளின் உண்மை தன்மையை கண்டறிய இந்நிகழ்வு தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது அவ்வாறாக எந்த செய்தியும் வெளியாகவில்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து,  வைரலான காணொலி உண்மைதானா என்பதை கண்டறிய அதனை ஆய்வு செய்தோம். அப்போது ராட்சத பலூன்களின்  நிழல் கீழே உள்ள மண்டபத்தின் மீது விழுகவில்லை என்பது தெரிய வந்தது.

மேலும், இதே போன்று Welcome to Nilgiris" என்று எழுதப்பட்டிருந்த ராட்சத பலூன்கள் மலை மேல் பறப்பது போன்ற காணொலியை அமைச்சர் எல். முருகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோன்று, தாமரை சின்னம் மற்றும் "L Murugan for Nilgiris" என்ற வாசகம் அடங்கிய பலூன்கள் பறப்பது போன்ற காணொலியையும் அவரே  தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் வைரலாகும் காணொலியும் இதேபோன்று கிராபிக்ஸ் செய்யப்பட்டு இருக்கலாம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் கன்னியாகுமரியில் இவ்வாறான நிகழ்வு நடைபெற்றதா என்று அப்பகுதியைச் சேர்ந்த பத்திரிக்கையாளரிடம் விசாரித்தோம். அதற்கு, கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலின்போது அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி தேர்தல் நாளுக்கு முன்பு வடசேரி பேருந்து நிலையத்தில் ஹீலியம் பலூனை பறக்கவிட்டு வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி மட்டுமே நடந்தது என்றும் வைரலாகும் காணொலியில் இருப்பது போன்ற நிகழ்வு கன்னியாகுமரியில் எங்கும் நடைபெறவில்லை" என்றும் பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

முடிவு :

நியூஸ் மீட்டர் ஆய்வு முடிவுகளின்படி விவேகானந்தர் மண்டபத்தின் மேலே "MODI AGAIN என்று வாசகம் பொறிக்கப்பட்ட ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டதாக வைரலாகும் காணொலி கிராபிக்ஸ் செய்யப்பட்டது என்றும் அவ்வாறான ஒரு நிகழ்வு அங்கு நடைபெறவில்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Note : This story was originally published by Newsmeter and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement