“முட்டுச்சந்துகளில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க...” - கூகுள் மேப்ஸ்’ன் 4 புதிய அப்டேட்டுகள்!
இந்தியாவில் அதிகபடியான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான ‘கூகுள் மேப்ஸ்’ முக்கியமான சில அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது.
வாடகைக் கார் நிறுவனங்கள் சில கூகுள் மேப்ஸ் சேவையைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு உள்நாட்டு சேவைகளைப் பயன்படுத்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, கூகுள் நிர்வாகம் கூகுள் மேப்ஸ்-க்கான ப்ரோகிராமிங் இன்டர்பேஸ் கட்டணத்தை 70% வரையில் கூகுள் நிறுவனம் குறைத்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில், இந்த வாரம் முதல் 40 இந்திய நகரங்களில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுள் மேப்ஸில் 'ஃப்ளைஓவர் காலவுட்' அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூகுள் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் இந்த அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு பயனர்களால் அதிகம் கோரப்பட்ட அம்சம் என்றும் கூறப்படுகிறது.
பொதுவாகக் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தி வாகனம் ஓட்டும் போது, ஃப்ளைஓவர்-ல் செல்ல வேண்டுமா, கீழே செல்ல வேண்டுமா என்பது நமக்குத் தெரியாது. இந்த பிரச்னைக்கு தீர்வாக ஃப்ளைஓவர்-ல் குறித்து முன்கூட்டியே அறிவித்துச் வழிகாட்டும் சேவை தான் இந்த Flyover Callout. இதேபோல் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் குறுகிய சாலைகளை தவிர்க்க 'குறுகிய சாலைகள்' ('narrow roads') என்ற அம்சத்தையும் கூகுள் அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூகுள் மேப்ஸ் இந்தியாவின் பொது மேலாளர் லலிதா ராமணி தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் முதல் ஆண்ட்ராய்டு மேப்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவிவும், iOS மற்றும் கார்ப்ளேயில் பின்னர் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு இந்தியாவில் உள்ள கூகுள் மேப்ஸ் சேவையில் புதிய வழிகாட்டுதல் திறனும் (new routing capability) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 8 இந்திய நகரங்களில் நான்கு சக்கர வாகன பயணங்களில் குறுகிய சாலைகளிள் செல்வதை தவிர்க்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து லலிதா ராமணி கூறியதாவது, “இந்திய சாலைகளுக்கென பிரத்தியேகமாக ஒரு AI (செயற்கை நுண்ணறிவு) மாடல் உருவாக்கப்பட்டது. இது சாலை அகலத்தை மதிப்பிடுகிறது. செயற்கைக்கோள் படங்களை, ஸ்ட்ரீட் வியூவ் படத்துடன் பொருத்தி, சாலையின் அகலத்தையும் அத்துடன் இணைக்கிறது. இதன் மூலம் சாலை வகை, கட்டிடங்களுக்கு இடையே உள்ள தூரம், மரங்கள், தூண்கள் மற்றும் மழை போன்ற தகவல்களைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முன்னணி மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலைய நிறுவனங்கள் மற்றும் டேட்டா அக்ரிகேட்டர்களான எலக்ட்ரிக் பே, ஏதர், கசம் மற்றும் ஸ்டேடிக் ஆகியவற்றுடன் இணைந்து நாட்டில் இருக்கும் 8,000 சார்ஜிங் நிலையங்கள் பற்றிய தகவல்கள் கூகுள் மேப்ஸில் சேர்க்க உள்ளது.