ஜார்ஜியா மேலவைத் தேர்தல்: தமிழ் வம்சாவளி இளைஞர் போட்டி!
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண செனட் (மேலவை) தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் அஸ்வின் ராமசாமி போட்டியிடுகிறார்.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாண செனட் (மேலவை) தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் அஸ்வின் ராமசாமி (24) போட்டியிடுகிறார். இதன்மூலம் அமெரிக்காவின் ஒரு மாகாண செனட் தேர்தலில் போட்டியிடும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ‘ஜென் ஸி’ இளைய தலைமுறையைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அஸ்வின் ராமசாமியின் பெற்றோர் 1990-ம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.
இதுகுறித்து அஸ்வின் ராமசாமி அளித்த பேட்டியில், “எனது தந்தை கோயம்புத்தூரை சேர்ந்தவர். தாயார் சென்னையை சேர்ந்தவர். இருவருமே தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்கள். இந்தியா, அமெரிக்கா என இரு நாட்டு கலாசாரத்தையும் அறிந்து நான் வளர்ந்தேன். ஒரு இந்துவாக இந்தியா கலாசாரம், தத்துவங்களின் மீது எனக்கு பற்றுதல் அதிகம். பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதத்தை படித்துள்ளேன். கல்லூரி படிப்பின்போது சம்ஸ்கிருதத்தை கற்று உபநிஷத்துக்களையும் பயின்றேன். யோகாசனம், தியானத்திலும் அதிக ஈடுபாடு உண்டு.
எனது சமுதாய மக்களுக்கு கைமாறு செய்ய வேண்டும் என்பதற்காக ஜார்ஜியா மாகாணத்தில் செனட் தோ்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகிறேன். நான் வளரும் போது எனக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இளைஞர்களின் குரலாக நான் ஒலிப்பேன். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்த நான் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்பட பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளேன். மாகாண அரசியலில் தொழில்நுட்பம் தெரிந்தவர்களும் இருக்க வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டு தேர்தல் தொழில்நுட்பம் தொடர்பான துறையியிலும் பணியாற்றினேன்” என தெரிவித்தார்.
தேர்தலில் அஸ்வின் ராமசாமி வெற்றி பெற்றால் ஜார்ஜியாவின் முதல் ‘ஜென் ஸி’ செனட் உறுப்பினர், கணினி அறிவியல் மற்றும் சட்டப் படிப்பை முடித்த ஜார்ஜியாவின் முதல் செனட் உறுப்பினர் மற்றும் ஜார்ஜியாவில் தேர்வாகும் முதல் இந்திய வம்சாவளி செனட் உறுப்பினர் என்ற பெருமைகளைப் பெறுவார். இணையப் பாதுகாப்பு, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தேர்தல்களை பாதுகாப்பாக நடத்தும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் தவிர ஜார்ஜியா மாகாணத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டப் பிரிவிலும் அஸ்வின் ராமசாமி பணியாற்றியுள்ளார்.