உத்தரகாண்டில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்... சட்டப்பேரவை 2 மணி வரை ஒத்திவைப்பு!
பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவுக்கு உத்தரகாண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
நாட்டில் பல்வேறு மதங்கள் தங்களுக்கென மதச் சட்டங்களை பின்பற்றுகின்றன. அவற்றுக்குப் பதிலாக எல்லோரும் பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாஜக அரசு பல ஆண்டுகளாக கூறி வருகிறது. அதாவது, அனைத்து மதத்தை சேர்ந்தவா்களுக்கும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை தொடா்பாக நாடு முழுவதும் ஒரே சட்டமாக பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்து வருகிறது. இதற்கு பல வகையில் ஆதரவுகளும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து, இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான சாத்தியகூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு சட்ட ஆணையத்தை மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. இதன் அடிப்படையில் கருத்துகளை கேட்டறிந்த 21வது சட்ட ஆணையம், அது தொடா்பான ஆலோசனை அறிக்கையை கடந்த 2018-ம் ஆண்டு வெளியிட்டது. ஆனாலும், தொடர் எதிா்ப்பு, நீதிமன்ற வழக்குகள் காரணமாக இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை உருவானது.
இந்நிலையில், இந்தச் சட்டத்தை உத்தரகாண்டில் அமல்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதனை அமல்படுத்துவது தொடர்பாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை உத்தரகாண்ட் அரசு அமைத்தது. அந்தக் குழு 740 பக்கங்கள் கொண்ட பொது சிவில் சட்டத்தின் இறுதி வரைவை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் கடந்த பிப்.2-ம் தேதி சமர்ப்பித்தது.
இதனிடையே பேரவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கப் பெற்றால், சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டிலேயே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் திகழும். அதேநேரம், ஏற்கனவே போர்ச்சுக்கீசிய ஆட்சிக் காலத்தில் இருந்தே கோவாவில் பொது சிவில் சட்டம் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.