10 ஆண்டுகளில் இரு மடங்கான மாதாந்திர குடும்ப செலவு, தனிநபருக்கு இவ்வளவா? - ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
இந்தியாவில் மாதாந்திர குடும்ப செலவு 2 மடங்குகளாக அதிகரித்து இருப்பதாக, மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்திய புள்ளியியல் மற்றும் திட்டச் செயலாக்க அமைச்சகத்தின் கீழ், கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை வரை குடும்ப நுகர்வோர் செலவின ஆய்வை தேசிய புள்ளியியல் அலுவலகம் நடத்தியது. இந்த ஆய்வில், குடும்பத்தின் மாதாந்திர தனிநபர் நுகர்வு செலவினம் மற்றும் நாட்டின் கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் மாநிலங்கள், மதிப்பீடுகளைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதையும் படியுங்கள் : “உச்சநீதிமன்றத்தில் கையெழுத்து போடக்கூடாது என ஓபிஎஸ் ரூ.5கோடி பேரம் பேசினார்” – தமிழ் மகன் உசேன் குற்றச்சாட்டு
இதையடுத்து, நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் வசிக்கும் 1,55,014 குடும்பங்கள் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள வசிக்கும் 1,06,732 குடும்பங்கள் என மொத்தம் 2,61,746 குடும்பங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையிலான ஆய்வு முடிவுகள் கடந்த பிப் - 24 ஆம் தேதி தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் குடும்ப நுகர்வோர் செலவின ஆய்வு வெளியிட்டது.
இதுதொடர்பாக ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது :
" தனிநபர் மாதாந்திர குடும்ப செலவு நகர்ப்புறங்களில் கடந்த 2011-12-ஆம் ஆண்டின் ரூ.2,630- லிருந்து கடந்த 2022-23-ஆம் ஆண்டில் ரூ.6,459-ஆக இருமடங்காக அதிகரித்துள்ளது. இதையடுத்து, கிராமப்புறங்களில் ரூ.1,430-லிருந்து ரூ.3,773-ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இந்த காலகட்டத்தில் தனிநபர் வருமானம் நகர்ப்புறங்களில் 1.3 மடங்கும், கிராமப்புறங்களில் 1.4 மடங்கும் மட்டுமே அதிகரித்துள்ளது.
கடந்த 2011-12ஆம் ஆண்டு விலையில் சராசரி தனிநபர் மாதாந்திர குடும்ப செலவானது நகர்ப்புறங்களில் கடந்த 2011-12 ஆம் ஆண்டின் ரூ. 2,630 லிருந்து கடந்த 2022-23 ஆம் ஆண்டில் ரூ. 3,510 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, கிராமப்புறங்களில் ரூ.1,430-லிருந்து ரூ.2,008 ஆக உயர்ந்துள்ளது.
இலவச பொருள்களின் மதிப்போடு சேர்த்து தற்போதைய விலையில் சராசரி தனிநபர் மாதாந்திர குடும்ப செலவு நகர்ப்புறங்களில் கடந்த 2011- 12 ஆம் ஆண்டின் ரூ.2,630-லிருந்து கடந்த 2022-23-ஆம் ஆண்டில் ரூ.6,521 ஆக அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் ரூ.1,430-லிருந்து ரூ.3,860-ஆக உயர்ந்துள்ளது.
ஆய்வின்படி, நாட்டின் விளிம்பு நிலை ஏழைகள் கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு ரூ.46 மற்றும் நகர்ப்புறத்தில் ரூ.67 மட்டுமே செலவழிப்பது தெரியவந்துள்ளது. அதேநேரத்தில், முதல் நிலை பணக்காரர்கள் கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு ரூ.350 மற்றும் நகர்ப்புறத்தில் ரூ.695 செலவழிக்கின்றனர். விளிம்பு நிலை ஏழைகளுக்கும் முதல் நிலை பணக்காரர்களுக்கும் இடையேயான செலவின இடைவேளை குறைந்தது 10 மடங்காக இருக்கிறது "
இவ்வாறு தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் குடும்ப நுகர்வோர் செலவின ஆய்வில் தெரிவிக்கபட்டுள்ளது.