சுடுகாடாக மாறும் காசா - ஐ.நா. தலைவர் குற்றச்சாட்டு!
காசா குழந்தைகள் மற்றும் பசியால் வாடும் மக்களின் சுடுகாடாக மாறி உள்ளது என ஐ.நா. தலைவர் பிலிப் லசரினி தெரிவித்தார். இஸ்ரேல் "மிகவும் கொடூரமான மற்றும் சூழ்ச்சித்திறமான படுகொலை திட்டத்தை" மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் காசாவின் உணவு விநியோக மையங்களில் 798 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. உலக உணவுத் திட்டத்தின்படி, இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் உள்ள சுமார் 90,000 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைப்பாட்டிற்கு சிகிச்சை தேவைப்படுகிறது.
காசாவில், பசிக்கொடுமை எப்போதும் இல்லாத அளவுக்கு நாட்கள் செல்ல செல்ல மோசமாக மாறி வருகிறது. இதனை தொடர்ந்து 615 பேர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன் நடத்தப்படும் காசா மனிதாபிமான அறக்கட்டளையின் விநியோக மையத்தில் கொல்லப்பட்டனர்.
மேலும் பசியை ஆயுதமாக பயன்படுத்தி இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது. காசா சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்து 57,762 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 137,656 பேர் காயமடைந்துள்ளனர்.