For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Gaza | 2வது ஆண்டாக பெத்லகேமில் அமைதியான முறையில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ்!

11:09 PM Dec 24, 2024 IST | Web Editor
 gaza   2வது ஆண்டாக பெத்லகேமில் அமைதியான முறையில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ்
Advertisement

காசாவில் ஓயாத போரால் தொடர்ந்து 2வது ஆண்டாக பெத்லகேம் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட களையிழந்து காணப்படுகிறது. மிகவும் அமைதியான முறையில் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது.

Advertisement

கிறிஸ்துமஸ் பண்டிகையை இயேசு பிறந்த தினமாக உலகமே கொண்டாடி வருகிறது. ஆனால், இயேசு பிறந்த இடமாக நம்பப்படும் பெத்லகேம் மட்டும் எந்த கொண்டாட்டத்திற்கான அறிகுறியின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த நகரம் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. காசாவில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே நடக்கும் போரால் கடந்த ஆண்டே பெத்லகேமுக்கு எந்த சுற்றுலா பயணிகளும் வரவில்லை. இதனால் கடந்த ஆண்டே பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை.

ஆனால் அடுத்த ஆண்டாவது தங்களின் வாழ்வில் ஒளி பிறக்கும் என காத்திருந்த பாலஸ்தீன மக்களின் எதிர்பார்ப்பு இந்த ஆண்டும் நிறைவேறவில்லை. காசா போர் 15 மாதங்களுக்கும் மேலாக நீடிப்பதால் இந்த ஆண்டும் பெத்லகேம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஏதுவுமின்றி களையிழந்து காணப்படுகிறது. இங்குள்ள மேங்கர் சதுக்கத்தில் பெரிய கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்படவில்லை. நினைவுப் பரிசுகள், பாரம்பரிய கைவினைப் பொருட்களை வாங்க ஆளில்லை. சதுக்கத்தை சுற்றி உள்ள கடைகள் காற்று வாங்குகின்றன.

கொரோனாவுக்கு முன்பாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பெத்லகேமுக்கு ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் சுற்றுலா பயணிகள் உலகின் பல இடங்களில் இருந்து வருவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு 1 லட்சத்திற்கும் குறைவான மக்களே வந்துள்ளனர். இந்த ஆண்டும் எந்த முன்னேற்றமும் இல்லை என அங்குள்ள மக்கள் சோகத்துடன் தெரிவித்துள்ளனர். பெத்லகேம் நகரில் 5,500 ஓட்டல்கள் உள்ள நிலையில் கிட்டத்தட்ட அனைத்துமே காலியாக இருப்பதாக அதன் உரிமையாளர்கள் கூறி உள்ளனர். ஓட்டல்களில் தங்குபவர்கள் எண்ணிக்கை 80% இருந்து 3% ஆகிவிட்டது.

https://twitter.com/sanaafheli/status/1871609696458879470

இந்நிலையில், இன்று (டிச. 24) பெத்லகேமில் இரண்டாவது ஆண்டாக அமைதியான முறையில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. பாலஸ்தீனிய சாரணர்கள் தெருக்களில் அமைதியாக அணிவகுத்துச் சென்றனர். சிலர் "எங்களுக்கு வாழ்வு வேண்டும், மரணம் அல்ல" என்று எழுதப்பட்ட பலகையை ஏந்திச் சென்றனர். மேலும், பெத்லகேமை விட்டு பலர் வெளியேறி வருவதால், இனி யாரும் நாட்டை விட்டு வெளியேறுவதை ஊக்குவிக்கக்கூடாது என்பதே நோக்கம் என கொண்டுள்ளதாக அங்குள்ள பாதிரியார்கள் மற்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement