“இதுவரை இல்லாத அளவு நெருக்கத்தில் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்” - #JoeBiden நம்பிக்கை!
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான தருணம் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நெருக்கத்தில் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7-ம் தேதி நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர். 200-க்கும் மேற்பட்டவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். அதையடுத்து அந்த அமைப்பினரை முழுமையாக ஒழித்துக்கட்டப்போவதாகச் சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியில் மிகக் கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது. இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஹமாஸிடம் எஞ்சியுள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்குமான ஒப்பந்த செயல்திட்டத்தை அமெரிக்கா கடந்த மே 31-ம் தேதி வெளியிட்டது. அந்த செயல்திட்டத்தை இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு இரண்டுமே ஏற்றுக்கொண்டன. இருந்தாலும் செயல்திட்டத்தில் சில திருத்தங்களை ஹமாஸ் அமைப்பினர் கோரியதால் ஒப்பந்தம் ஏற்படுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
இந்நிலையில், மீண்டும் தொடங்கியுள்ள பேச்சுவார்த்தையில் வேறுபாடுகள் களையப்பட்டுள்ளதாகவும் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படலாம் என்றும் மத்தியஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஜோ பைடன், “காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கும், ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்குமான ஒப்பந்தம் எட்டப்படும் என உறுதியாக நம்புகிறேன். அண்மையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான தருணம் இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கத்தில் வந்துள்ளது” என தெரிவித்தார்.
முன்னதாக, பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பின் பிரதிநிதிகள் இடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அனைத்தும் களையப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதன் காரணமாக போர் நிறுத்தம் விரைவில் மேற்கொள்ளப்படுவதற்கான சூழல் நிலவுவதாகவும் தெரிவித்தனர்.
இதுதவிர, போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வருவதற்கு முன்னரே பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவது, அத்தியாவசியப் பொருள்களை காஸா பகுதியில் விநியோகிப்பது போன்ற ஒப்பந்த அம்சங்களை நிறைவேற்றத் தொடங்கப்படும் என்று இந்த பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்துவரும் மேற்காசிய நாடுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பேச்சுவாா்த்தை வெற்றிபெற்றதாகவோ, போர் நிறுத்தம் உறுதியாகிவிட்டதாகவோ அந்த அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள போர் நிறுத்த செயல்திட்டத்தில் அதிக ஆர்வம் வெளிப்படுத்தப்படவில்லை.
இந்தச் சூழலிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நெருக்கத்தில் இருப்பதாக ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.